புதுடெல்லி: நடுவானில் நிகழவிருந்த பெரும் விபத்தைத் தனது துணிச்சலால் தடுத்த இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சரை, பிரதமர் நரேந்திர மோடி வீடியோ அழைப்பில் தொடர்புகொண்டு பாராட்டினார்.
துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி 170-க்கும் மேற்பட்டோருடன் சென்ற Flydubai நிறுவனத்தின் FZ1073 விமானத்தில், துணை விமானி திடீரென கேப்டன் ஸ்மித் மச்சரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த நிலையிலும் போராடிய ஸ்மித், விமானி அறைக் கதவைத் திறந்து மற்றவர்களின் உதவியைப் பெற வழிவகுத்தார்.
இதையடுத்து, விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் தாக்குதலில் ஈடுபட்டவரைக் கட்டுப்படுத்தினர். மற்றொரு விமானியின் உதவியுடன் விமானம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. சம்பவத்தின் பின்னணி குறித்து ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
“இந்தியர்கள் உயிர்களைக் காப்பவர்கள்”
கேப்டன் ஸ்மித்துடன் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, அவரது துணிச்சல், சமயோசிதம் மற்றும் நிதானத்தைப் பாராட்டினார். இந்தியர்கள் உயிரைப் பறிப்பவர்கள் அல்ல; உயிர்களைக் காப்பவர்கள் என்பதை ஸ்மித் உலகிற்குக் காட்டியிருப்பதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
விமானத்தில் நடந்த சம்பவத்தை பிரதமரிடம் விளக்கிய ஸ்மித், கடுமையான வலியிலும் ஹனுமன் சாலிசாவைத் தொடர்ந்து உச்சரித்ததாகவும் அதுவே தனக்கு மனவலிமையை அளித்ததாகவும் தெரிவித்தார். விரைவில் முழுமையாகக் குணமடைய பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
தற்போது அபுதாபியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கேப்டன் ஸ்மித்தின் உடல்நிலை தேறி வருவதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.






