புதுடெல்லி: இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்க சில பெரும் தொழிலதிபர்கள் தடையாக இருப்பதாக எலான் மஸ்க் குற்றம்சாட்டிய நிலையில், இணையச் சேவைக்கான அனுமதி நடைமுறையில் பாரபட்சம் இல்லை என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்திய மக்களிடம் தங்களது ஏகபோக ஆதிக்கத்தைத் தக்கவைக்கச் சிலர் ஸ்டார்லிங்கைத் தடுப்பதாக மஸ்க் தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளார். எனினும், யாருடைய பெயரையும் அவர் குறிப்பிடவில்லை.
இதற்குப் பதிலளித்த தொலைத்தொடர்புத் துறை, மூன்று நிறுவனங்களும் ஏறத்தாழ ஒரே ஒழுங்குமுறை நிலையில் இருப்பதாகவும், அவற்றுக்கான பாதுகாப்பு மதிப்பீடுகள் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளது. அனுமதி நடைமுறை நியாயமற்றதாக அல்லது பாரபட்சமானதாக இருப்பதாகக் கூறுவது அடிப்படையற்றது என்றும் விளக்கமளித்துள்ளது.
ஸ்டார்லிங்க், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் செயற்கைக்கோள் இணைய முயற்சிகளுக்கு ஆரம்பக்கட்ட அனுமதிகள் கிடைத்துள்ளன. அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் இறுதி அனுமதிகள் இன்னும் நிலுவையில் உள்ளன.






