சூர்யாவை தாக்கினால் ஒரு லட்சம் பரிசு… மயிலாடுதுறை பாமக அறிவிப்பு!!

சூர்யாவை தாக்கினால் ஒரு லட்சம் பரிசு… மயிலாடுதுறை பாமக அறிவிப்பு!!

சூர்யாவை தாக்கினால் ஒரு லட்சம் பரிசு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ‘WeStandWithSuriya’ என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.

நடிகர் சூர்யா தயாரித்து நடித்த, ‘ஜெய்பீம்’ திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. 1993ம் ஆண்டு நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு புனையப்பட்ட இந்த படம் குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். இது ஒருபுறமிருக்க, படத்தில் வரும் காட்சி ஒன்றில் காலண்டரில் உள்ள புகைப்படம் குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. தொடர்ந்து குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் பெயரும் நெருடலாக இருப்பதாக பரவலாக பேசப்பட்டது. இதையடுத்து, அந்த புகைப்படம் நீக்கப்பட்டு புதிய படத்துடன் திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து சூர்யாவுக்கு அன்புமணி ராமதாஸ் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். அதற்கு சூர்யா பதிலும் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து காவல்துறை தாக்கியதால் மறைந்த ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் பெயரில் 10 லட்ச ரூபாய் டெபாசிட் செய்து அதிலிருந்து மாதந்தோறும் அவருக்கு வட்டி கிடைக்க வழி செய்ய முடிவு செய்திருப்பதாக நடிகர் சூர்யா நேற்று அறிக்கை மற்றும் கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார். பார்வதி அம்மாளுக்கு பிறகு அந்த பணம் அவரது மகளுக்கு கிடைகும் எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மயிலாடுதுறையில் நடிகர் சூர்யா நடித்த வேல் திரைப்படம் திரையிடப்பட்டது. பாமகவினர் அப்பகுதிக்கு வருவதை அறிந்த திரையரங்க நிர்வாகம் போஸ்டரை மாற்றி ஒட்டியது.

திரையரங்கிற்கு வந்த பாமகவினர் திரைப்பட காட்சியை நிறுத்த சொல்லி வற்புறுத்தியதால் ஒடிக்கொண்டிருந்த வேல் திரைப்படம் காட்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. நடிகர் சூர்யாவிற்கு எதிராக பாமகவினர் முழக்கமிட்டனர். சூர்யாவின் போஸ்டரை கிழித்தனர்.

தொடர்ந்து நடிகர் சூர்யா மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் அவரை தாக்கும் இளைஞர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட பாமக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டிக்கும் விதமாக ட்விட்டரில், ‘WeStandWithSuriya’ என்ற ஹேஷ்டேக் அவரது ரசிகர்களால் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. இது இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *