சென்னை: தமிழகத்தில் இன்று அக்டோபர் 14 அன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கைப் பகுதியில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பருவமழை தொடங்கச் சாதகமான சூழல்
அடுத்த இரண்டு நாட்களில் நாட்டின் எஞ்சிய பகுதிகளிலிருந்து தென்மேற்குப் பருவமழை முழுமையாக விலகுவதற்கான சூழல் உருவாகி வருகிறது. அதே நேரத்தில், தென்னிந்தியாவின் தென்பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்குச் சாதகமான நிலை காணப்படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.






