ரபேல் நடாலின் சாதனையை நெருங்க முடியாது: ஆன்டி முர்ரே

ரபேல் நடாலின் சாதனையை நெருங்க முடியாது: ஆன்டி முர்ரே
ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலின் சாதனையை யாராலும் நெருங்க கூட முடியாது என்று இங்கிலாந்து டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே தெரிவித்துள்ளார்.
Rafael Nadal and Andy Murray

பிரான்ஸின் பாரீஸில் நடந்த ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் ஜோகோவிச்சை தோற்கடித்து, 13-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சரித்திரம் படைத்தார். மேலும் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற ஸ்விட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரின் சாதனையையும் (20 கிராண்ட்ஸ்லாம்) நடால் சமன் செய்துள்ளார்.

இதுகுறித்து வீரரும், ஒலிம்பிக் சாம்பியன், இங்கிலாந்து வீரருமான ஆன்டி முர்ரே கூறும்போது, ‘நடாலின் பிரெஞ்ச் ஓபன் சாதனையை உலகில் யாராலும் முறியடிக்க முடியாது என்றே நான் கருதுகிறேன். அவர் நிஜமாகவே சாம்பியன். களிமண் தரையின் கிங் என்பதை நிரூபித்து வருகிறார்.

விளையாட்டு உலகில் மிகச்சிறந்த சாதனைகளில் இதுவும் ஒன்று. அமெரிக்க ஜாம்பவான் பீட் சாம்ப்ராஸ் ஒட்டுமொத்தத்தில் (4 வகையான கிராண்ட்ஸ்லாம் போட்டியை சேர்த்து) 14 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இருக்கிறார். ஆனால் நடாலோ, ஒரே கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்ஷிப் போட்டியிலேயே அவரை விட இன்னும் ஒன்று தான் பின்தங்கி உள்ளார். உண்மையிலேயே இது நம்ப முடியாத ஒன்று. நடாலின் சாதனையை யாராலும் நெருங்க கூட முடியாது’ என்றார்.

34 வயதான நடாலுக்கு போட்டியாக உள்ள 39 வயதான பெடரர் 20 கிராண்ட்ஸ்லாமும், 33 வயதான ஜோகோவிச் 17 கிராண்ட்ஸ்லாமும் கைப்பற்றி உள்ளனர். அதே சமயம் பெடரரும், ஜோகோவிச்சும் பிரெஞ்சு ஓபனை ஒரே ஒரு முறை மட்டுமே வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *