சென்னை: ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த அணியில் இடம்பெற்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.75 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
ஜப்பானின் ஐச்சி–நகோயாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கதிரன் பஹால், எம்.ஆர். பூவம்மா, பிராச்சி மற்றும் வித்யா ராம்ராஜ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, பந்தய தூரத்தை 3 நிமிடங்கள் 29.69 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தது. பஹ்ரைன் அணி வெள்ளிப் பதக்கத்தையும், சீன அணி வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.
முதலமைச்சர் விஜய் வாழ்த்து
இதுகுறித்து சமூக வலைதளப் பதிவில் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் விஜய், தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த இந்திய மகளிர் அணிக்கும், அணியில் இடம்பெற்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கும் மனமார்ந்த பாராட்டுகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
வித்யா ராம்ராஜின் சிறப்பான சாதனையைப் பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.75 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
பதக்கங்களைக் குவித்த வித்யா
இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வித்யா ராம்ராஜ் ஏற்கெனவே 4×400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். இதற்காக வித்யா ராம்ராஜ் மற்றும் விஷால் டி.கே. ஆகியோருக்கு தலா ரூ.50 லட்சம் ஊக்கத்தொகையை முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றதுடன், பி.டி.உஷாவின் 42 ஆண்டுகால தேசியச் சாதனையையும் வித்யா முறியடித்தார். அந்தச் சாதனைக்காக அவருக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகையும் அறிவிக்கப்பட்டது. தற்போது மகளிர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்று மீண்டும் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.





