குறள் சொன்னால் பெட்ரோல் இலவசம் – திருக்குறளை ஊக்குவிக்க புது முயற்சி

குறள் சொன்னால் பெட்ரோல் இலவசம் – திருக்குறளை ஊக்குவிக்க புது முயற்சி

சோப்பு வாங்கினால் சீப்பு இலவசம் என்றும், 5 லிட்டர் எண்ணை வாங்கினால் 1 லிட்டர் எண்ணை இலவசம் என்றும், ஒரு புடவை வாங்கினால், 2 புடவை இலவசம் என விற்பனையின் எண்ணிக்கை மற்றும் இலாபத்தை அதிகரிக்கும் நோக்கில் வர்த்தகம் சென்று வருகிறது. இந்தநிலையில் கரூரில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒருவர் திருக்குறள் சொன்னால் பெட்ரோல் இலவசமாக தந்து வருகிறார்.

தற்போது, 1 லிட்டர் பெட்ரோல் 90 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த சூழ்நிலையில், “செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம், செல்வத்துள் எல்லாம் தலை” என்ற வரிகளுக்கு ஏற்ப, கல்வி சிந்தனை மற்றும் சமுதாய நோக்கத்தோடு, மாணவர்கள் மூலம் நல்ல சிந்தனையும் அறத்தையும் நாட்டில் விதைக்க முடியும் என்ற தன்னம்பிக்கையோடு 10 குறள் சொன்னால் அரை லிட்டர் பெட்ரோலும், 20 குறள் சொன்னால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம் என கரூரில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்  செங்குட்டுவன் என்பவரின் முயற்சி சமூக ஆர்வலர் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் பகுதியைச் சேர்ந்த செங்குட்டுவன் எம்.காம்  பட்டதாரியான இவர், திருக்குறளின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, கரூரில் வள்ளுவர் உணவகம், வள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வள்ளுவர் பெட்ரோல் ஏஜென்சிஸ் போன்ற அனைத்து நிறுவனங்களும் வள்ளுவர் பெயரில் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த தை பொங்கல் திருநாளான ஜனவரி 15 முதல் வரும் ஏப்ரல் 31ஆம் தேதி வரை பள்ளி மாணவ மாணவியர் மத்தியில் திருக்குறள் கற்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில், கரூர் – மதுரை பைபாஸ் சாலையில் உள்ள அவரது வள்ளுவர் பெட்ரோல் பங்கில் பத்து திருக்குறள் சொல்லும் குழந்தைகளுக்கு அவர்களது இருசக்கர வாகனத்திற்கு அரை லிட்டர் பெட்ரோலும்,  20 திருக்குறள் சொல்லும் குழந்தைகளின் வாகனத்திற்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கி வருகிறார்.

இதை அறிந்த பள்ளி மாணவ மாணவியர்கள் தங்களது பெற்றோரின் வாகனத்துடன் சென்று திருக்குறளை சொல்லி பெட்ரோல் அடித்துச் சென்று வருகின்றனர். இது இப்பகுதியில் மக்களிடமும், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, கல்வியாளர் செங்குட்டுவனிடம் கேட்டதுபோது, இளைஞர்கள், வளரும் குழந்தைகள் திருக்குறளை நன்றாக கற்க வேண்டும். திருக்குறளில் சொல்லாத கருத்துக்களே இல்லை என்றே கூறலாம். மாணவ, மாணவியர்களை திருக்குறள் படிக்க வைக்க வேண்டும், குறளின் மீது அவர்களது ஆர்வத்தை தூண்ட வேண்டும் என்பதற்காக இதுபோன்ற முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறினார்.

தற்போது, பள்ளி மாணவ மாணவிகளிடையே வாசிக்கும் திறன் மிக மிக குறைந்து விட்டது. ஆங்கில மோகத்தில் மாணவ மாணவிகள் நகர்ந்து வருகின்றனர் இதனால் . தமிழ் அழிந்து விடக் கூடாது. தமிழில் பேசவும், குறள் கற்கவும், இலக்கணப் பிழையின்றி மாணவ மாணவிகள் தமிழ் கற்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்று இலவச அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும், எங்களது வள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  1330 குறள் சொல்லும் மாணவர்களின் மூன்றாண்டு கல்வி செலவு அனைத்தும் கல்லூரி நிர்வாகமே ஏற்றுக் கொண்டு இலவசமாக அவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றது என்றும் படிக்கும் மாணவ மாணவியர்கள் 250 குறள் கூறினால், திருச்சியிலிருந்து சென்னை வரை இலவசமாக விமானத்தில் அழைத்துச் சென்று வரப்படும் என்றும் இது எல்லாமே திருக்குறளை மாணவர்கள் கற்க ஆர்வத்தை தூண்ட வேண்டும் என்பதற்காகவே இது போன்று செய்யப்படுவதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் திருக்குறளின் மாண்பு குறைந்து கொண்டே வரும் நிலை ஏற்பட்டு வருகிறது. திருக்குறளை உலக நாடுகளைப் பின்பற்றி பேசி வருகிறது. இந்தியாவில் வட மாநிலங்களில் திருக்குறள் பெருமையாகப் பேசப்படுகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் திருக்குறளை முன்னுதாரணம் காட்டி பேசும் நிலையை காண முடிகிறது. அப்படி இருக்கும் போது, தமிழகத்தில் உள்ள குழந்தைகள், மாணவ – மாணவிகள்  திருக்குறளில் உள்ள நல்ல கருத்துக்களை வாழ்க்கையில்  பின்பற்றி நடக்க வேண்டும். அதற்கு ஒவ்வொரு மாணவர்களும் பள்ளி பருவத்திலே திருக்குறளை முழுமையாக கற்க வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது என்றார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *