சென்னை: தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழையின்போது இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
8 மாவட்டங்களில் மிதமான மழை
விருதுநகர், திருச்சி, நாமக்கல், சேலம், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
நாளையும் இடி–மின்னல் தொடரும்
மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் நாளையும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடி, மின்னல் ஏற்படும் நேரங்களில் பொதுமக்கள் திறந்தவெளிகள், மரங்கள் மற்றும் மின்கம்பங்களுக்கு அருகே நிற்பதைத் தவிர்த்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.






