ஸ்டாக்ஹோம்: பிரபஞ்சத்தின் மர்மங்களை அறிய உதவும் உயர் ஆற்றல் நியூட்ரினோக்களைக் கண்டறிவதற்கான ‘ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகத்தை’ உருவாக்குவதில் முக்கியப் பங்களித்த பெல்ஜியம்–அமெரிக்க இயற்பியலாளர் பிரான்சிஸ் ஹால்சனுக்கு 2026-ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
“ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகத்திற்குச் செய்த தீர்மானகரமான பங்களிப்புகள் மற்றும் வானியற்பியல் தோற்றம் கொண்ட உயர் ஆற்றல் நியூட்ரினோக்களைக் கண்டுபிடித்ததற்காக” இந்தப் பரிசு வழங்கப்படுவதாக ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி தெரிவித்துள்ளது.
‘பேய் துகள்’ என்றால் என்ன?
நியூட்ரினோக்கள் மிகச் சிறிய நிறையைக் கொண்ட, மின்னூட்டமற்ற அடிப்படைத் துகள்கள். இவை பூமியையும் மனித உடலையும் எவ்விதத் தடயமுமின்றிக் கடந்து செல்வதால், அறிவியல் உலகில் ‘பேய் துகள்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.
நியூட்ரினோக்கள் பொருள்களுடன் மிக அரிதாகவே வினைபுரிவதால் அவற்றைக் கண்டறிவது கடினம். ஆனால், அவை பயணிக்கும்போது திசை மாறாமலும் ஆற்றலை இழக்காமலும் இருப்பதால், வெடிக்கும் நட்சத்திரங்கள், கருந்துளைகள் மற்றும் காமா கதிர் வெடிப்புகள் போன்ற தொலைதூர விண்வெளி நிகழ்வுகள் குறித்த தனித்துவமான தகவல்களை வழங்குகின்றன.
தென் துருவப் பனிக்குள் ஆய்வகம்
தென் துருவத்தின் தெளிவான பனிப்பரப்பைப் பயன்படுத்தி நியூட்ரினோக்களைக் கண்டறியலாம் என்ற யோசனையை பிரான்சிஸ் ஹால்சன் 1988-ஆம் ஆண்டு முன்வைத்தார். அவரது அறிவியல் தலைமையில் அண்டார்டிகாவின் பனிக்குள் ஒரு கன கிலோமீட்டர் பரப்பில் ஒளி உணரிகள் பொருத்தப்பட்ட ‘ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகம்’ உருவாக்கப்பட்டது.
நியூட்ரினோ ஒன்று அணுக்கருவுடன் அரிதாக மோதும்போது உருவாகும் மிகச்சிறிய ஒளிப்பளிச்சை இந்த உணரிகள் பதிவு செய்கின்றன. 2011-ஆம் ஆண்டு முழுமையடைந்த இந்த ஆய்வகம், சூரியக் குடும்பத்திற்கு அப்பாலிருந்து வரும் உயர் ஆற்றல் நியூட்ரினோக்களைக் கண்டறிந்து புதிய வானியல் ஆய்வுகளுக்கு வழிவகுத்தது.
யார் இந்த பிரான்சிஸ் ஹால்சன்?
1944-ஆம் ஆண்டு பெல்ஜியத்தின் டீனென் நகரில் பிறந்த பிரான்சிஸ் ஹால்சன், தற்போது அமெரிக்காவின் விஸ்கான்சின்–மேடிசன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். 82 வயதான அவர், நியூட்ரினோ வானியலின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
தனக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது மிகப்பெரிய ஆச்சரியத்தை அளித்ததாகக் கூறிய ஹால்சன், நியூட்ரினோக்கள் மூலம் பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ளும் பயணம் இப்போதுதான் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ரூ.12 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனா
இயற்பியல் நோபல் பரிசுடன் 12 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனா பரிசுத் தொகையும் பிரான்சிஸ் ஹால்சனுக்கு வழங்கப்படுகிறது. டிசம்பர் 10-ஆம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் நோபல் பதக்கமும் சான்றிதழும் வழங்கப்படும்.






