தமிழ்நாட்டு அரசியலை மிஞ்சும் அமெரிக்கர்கள்.. ஜோ பைடனின் அதிரடி திட்டங்கள்.. ட்ரம்புக்கு டாடா

தமிழ்நாட்டு அரசியலை மிஞ்சும் அமெரிக்கர்கள்.. ஜோ பைடனின் அதிரடி திட்டங்கள்.. ட்ரம்புக்கு டாடா

அமெரிக்காவில் டிரம்ப் செயல்படுத்திய பல திட்டங்களை ஓரங்கட்டி, ஒபாமா ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை மீண்டும் செயல்படுத்த புதிய அதிபராக பதவியேற்கும் ஜோ பைடன் திட்டமிட்டுள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு யாரும் எதிர்பாராத விதமாக குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 45 அதிபராக பொறுப்பேற்றார்.

அவர் பதவியேற்றவுடன், அமெரிக்கவும், அந்நாட்டின் வளங்களும் அமெரிக்கர்களுக்கு மட்டுமே என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். மேலும், முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களும் ரத்து செய்யப்பட்டன.

இந்த சூழலில் தற்போது நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது, டிரம்ப்பின் கொள்கைகளையும், பல்வேறு திட்டங்களை ரத்து செய்தது தொடர்பாகவும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில், அதிபராக பதவியேற்றதும், ட்ரம்ப் அமல்படுத்திய பல்வேறு திட்டங்களை ரத்து செய்யவும், ஒபாமா ஆட்சியின் திட்டங்களை பின்பற்றவும் பைடன் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, இந்தியர்கள் மிகவும் எதிர்பார்க்கும் எச் -1 பி விசாக்கள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதோடு, நாடு வாரியாக வேலைவாய்ப்பு அடிப்படையிலான விசாக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரம்பை அகற்ற பைடன் திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து, குடியேற்றக் கொள்கையில் திருத்தம் மேற்கொண்டு ஒரு கொடியே 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு சட்டப்படி அமெரிக்க குடியுரிமை அளிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் 5 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் பயனடைய உள்ளனர்.

ஆப்ரிக்கா மற்றும் இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த, 13 நாடுகளுக்கு அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்ள ட்ரம்ப் விதித்த தடையை நீக்குவது, பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் வர விதிக்கப்பட்ட, கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது உள்ளிட்டவையும் ஜோ பைடனின் திட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் திறன்மிகுந்த வெளிநாட்டு ஊழியர்களை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்துவதுடன், மெக்சிகோ எல்லையில் அகதிகளைத் தடுக்க பெரும் பொருட் செலவில் சுவர் கட்டும் திட்டத்தை கைவிட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா இனி யாரையும் கைவிடாது என முழங்கிய ஜோ பைடனின் இந்த திட்டங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும், சுற்றுச்சூழல் கொள்கை,ஓரின சேர்க்கையாளர்களுக்கான உரிமைகள், குடியேற்றம், இன ரீதியான உறவு, மருத்துவ காப்பீடு, வர்த்தகம், வரி குறைப்பு, சிவில் உரிமைகள், ராணுவச் செலவுகள் போன்றவற்றில் முந்தைய ஜனநாயகக் கட்சி அதிபரான ஒபாமாவின் திட்டத்தையே பின்பற்ற ஜோ பைடன் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *