மாஸ்கோ: உலக அதிகாரச் சமநிலையில் ஏற்பட்டு வரும் மிகப்பெரிய மாற்றங்களால், அடுத்த சில ஆண்டுகளிலும் சர்வதேச மோதல்கள் தொடர்வதற்கான வாய்ப்பு அதிகம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோவில் நடைபெற்ற ‘வால்டாய் சர்வதேச விவாதக் குழு’ கூட்டத்தின் முழுமையான அமர்வில் உரையாற்றியபோது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
அதிகரிக்கும் சர்வதேசப் பதற்றம்
“வரும் ஆண்டுகளில் உலகளவில் எந்தச் சூழல் உருவானாலும், சர்வதேச மோதல்கள் தொடர்வதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. தற்போது நடைபெறும் அடிப்படை மாற்றங்களும், அவற்றால் உருவாகும் வாய்ப்புகளும் பெரிய பலனைப் பெறும் நோக்கில் ஆபத்தான முடிவுகளை எடுக்க சில நாடுகளைத் தூண்டுகின்றன” என புதின் கூறினார்.
உலக அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரம் மாற்றமடைந்து வரும் காலகட்டத்தில், சில நாடுகளின் அதிகரித்துவரும் ஆதிக்க விருப்பமும் துணிச்சலான நடவடிக்கைகளும் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
பேரழிவுச் சூழலைத் தவிர்க்க வேண்டும்
சர்வதேச மோதல்கள் தொடரக்கூடும் என்றாலும், பேரழிவுக்கு வழிவகுக்கும் சூழ்நிலைகள் தவிர்க்கப்பட வேண்டும் என புதின் வலியுறுத்தினார். குறிப்பாகப் பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தும் நிலை உருவாகக்கூடாது என்றும், உலகம் திரும்ப முடியாத ஆபத்தான கட்டத்தை எட்டாமல் தடுப்பது அவசியம் என்றும் அவர் கூறினார்.
ரஷ்யா மீது நேரடித் தாக்குதல் நடத்தப்பட்டால், தனது வசமுள்ள அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார். எனினும், ரஷ்யா முதலில் இத்தகைய நடவடிக்கையைத் தொடங்காது என்றும் புதின் கூறியுள்ளார்.
மேற்கத்திய ஆதிக்கம் குறையும் எனக் கருத்து
தற்போதைய பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியிலும், நீண்டகால அடிப்படையில் உலக நிலைமை மேம்படும் என நம்புவதாக புதின் தெரிவித்தார். மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் குறைந்து, நிலையான மற்றும் பல்துருவ உலக ஒழுங்கு உருவாகும்போது சர்வதேச சூழல் சிறப்பாக மாறும் என்பது அவரது கருத்தாகும்.
உக்ரைன் போரைத் தொடங்கியதற்கான பொறுப்பையும் புதின் தனது உரையில் மறுத்தார். நேட்டோ அமைப்பின் கிழக்கு நோக்கிய விரிவாக்கமும், ரஷ்யாவுக்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கைகளுமே போருக்குக் காரணம் என அவர் மீண்டும் குற்றம்சாட்டினார். இருப்பினும், 2022 பிப்ரவரியில் உக்ரைன் மீது முழு அளவிலான ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது ரஷ்யா என்பது குறிப்பிடத்தக்கது.






