கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதற்காகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் மத்திய அரசும், மாநில அரசும் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் பல்வேறு கட்டங்களில் ஊரடங்குகளைப் பிறப்பித்துக் கட்டுப்பாடுகளை விதித்தன. ஊரடங்கை மீறியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், தங்களின் வாழ்வாதாரத்திற்காகவும், குடும்பத்தின் பசிப்பிணியைப் போக்கிடவும் வறியோரும், வாடி நலிந்தோரும், வழக்கமான தினக்கூலியினரும், அன்றாடம் வேலைக்குச் செல்வோரும் ஊரடங்கு கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க இயலாமல், பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என சுட்டிக்காட்டினார்.
வயிற்றுப் பிழைப்பிற்காக ஊரடங்குக் கட்டுப்பாடுகளை மீறினார்களே தவிர வம்படியாகவோ அல்லது உள்நோக்கத்துடனோ வேண்டுமென்றே மீறவில்லை. ஆனால், அப்படித் தங்களின் அன்றாடப் பணிகளுக்குச் சென்ற லட்சக்கணக்கானவர்கள் மீது, அதிமுக அரசு பேரிடர் மேலாண்மைச் சட்டப் பிரிவுகளின் கீழும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188-ன் கீழும், கிரிமினல் வழக்குப் பதிவு செய்து அந்த வழக்குகள் எல்லாம் தற்போது நிலுவையில் இருக்கின்றன என ஸ்டாலின் குறிப்பிட்டார்.
read more: சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கமல்: விரைவில் பிரச்சாரம்!
இப்படிப் பதியப்பட்ட வழக்குகளால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்காலமே கேள்விக்குரியதாக மாறியுள்ளது. வெளிநாடுகளுக்குச் செல்ல பாஸ்போர்ட் எடுப்பதற்கு இந்த வழக்குகள் பெரும் தடையாக உள்ளன. இதனால் கரோனா காலத்தில் தங்கள் வாழ்வாதாரம் முழுவதும் பாதிக்கப்பட்ட அவர்களின் எதிர்காலமும் இந்த கிரிமினல் வழக்குகளால் பாதிக்கப்பட்டுள்ளன என்ற அவர்,
கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருகின்ற இந்தத் தருணத்தில், அந்தக் கட்டுப்பாடுகளை மீறியதற்காகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் பழனிசாமிக்கு வலியுறுத்தியுள்ளார்.