வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை மருத்துவ ஆலோசனையின்றி அளவின்றி, மீண்டும் மீண்டும் அல்லது நீண்ட காலம் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த மருந்துகளின் முறையற்ற பயன்பாட்டால் சிறுநீரகப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுநீரகப் பாதிப்பு ஏற்படும் அபாயம்
வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளின் முறையற்ற பயன்பாடு, தவிர்க்கக்கூடிய சிறுநீரகச் சிக்கல்களையும் நாள்பட்ட சிறுநீரக நோய் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவரின் ஆலோசனையின்றி சுயமாக மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல்
நோயாளியின் மருத்துவத் தேவையை மதிப்பீடு செய்த பிறகே வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளும் இந்த மருந்துகளின் பயன்பாட்டைக் கண்காணித்து, அவை தேவையின்றிப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருந்தகங்களுக்கும் எச்சரிக்கை
மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளைப் பயன்படுத்தும் சுய மருத்துவத்தை ஊக்குவிக்கக் கூடாது என்று மருந்தகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருந்துகளை வழங்கும்போது நடைமுறையில் உள்ள பரிந்துரை மற்றும் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.






