புதுடெல்லி: புற்றுநோய் சிகிச்சைக்கான செலவைக் குறைக்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட 137 மருந்துகளின் வர்த்தக லாப வரம்பை அதிகபட்ச சில்லறை விலையில் 30 சதவீதமாக நிர்ணயித்து தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி திருத்தப்பட்ட விலைகள் நவம்பர் 9ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. மருந்துகளின் தற்போதைய விலைக் கட்டமைப்பைப் பொறுத்து, அதிகபட்ச சில்லறை விலை 70 சதவீதம் வரை குறையக்கூடும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எந்த மருந்துகளுக்குப் பொருந்தும்?
ஏற்கெனவே அரசின் நேரடி உச்சவிலை நிர்ணயப் பட்டியலில் இடம்பெறாத, தேர்ந்தெடுக்கப்பட்ட புற்றுநோய் மருந்துகளுக்கு இந்த நடவடிக்கை பொருந்தும்.
மத்திய சுகாதாரச் சேவைகள் தலைமை இயக்குநரகத்தின் கீழ் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 137 மருந்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்தக் குழுவில் புற்றுநோய் மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.
2013ஆம் ஆண்டின் மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணையின் 19வது பிரிவின் கீழ், பொதுநலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து மருந்துகளுக்கும் 70% குறையுமா?
பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்து மருந்துகளின் விலையும் ஒரே அளவில் குறையாது. ஒவ்வொரு மருந்தின் தற்போதைய விலை மற்றும் வர்த்தக லாப வரம்பைப் பொறுத்து விலைக்குறைப்பு மாறுபடும்.
மேலும், 30 சதவீதம் என்பது மருந்து விலையில் நேரடியாக வழங்கப்படும் தள்ளுபடி அல்ல. மருந்து விற்பனையில் அனுமதிக்கப்படும் வர்த்தக லாப வரம்புக்கான கட்டுப்பாடாகும்.
ஏழு நாட்களுக்குள் புதிய விலை விவரம்
அரசிதழ் அறிவிப்பு வெளியான ஏழு நாட்களுக்குள், திருத்தப்பட்ட விலை விவரங்களை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்துக்கு உற்பத்தியாளர்கள் தெரிவிக்க வேண்டும்.
புதிய கணக்கீட்டின்படி கிடைக்கும் விலையைவிட, ஒரு மருந்தின் தற்போதைய அதிகபட்ச சில்லறை விலை குறைவாக இருந்தால், அந்தக் குறைந்த விலையையே நிறுவனம் தொடர வேண்டும். இந்த நடவடிக்கையைப் பயன்படுத்தி விலையை உயர்த்த அனுமதி இல்லை.
மருந்துகளின் தற்போதைய உற்பத்தி அளவைப் பராமரிக்கவும் உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிகளை மீறி அதிகமாக வசூலிக்கப்படும் தொகையை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும்.






