கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள, குட் லக் சகி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
பெண்குயின் படத்திற்கு பிறகு, நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த படம் ‘குட்லக் சகி’. தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ள இப்படத்தை நாகேஷ் குக்குனூர் இயக்கியுள்ளார். தெலுங்கு பட உலகின் பிரபல தயாரிப்பாளரான தில் ராஜு மற்றும் வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் பேனர் சார்பில் சுதீர் சந்திர பதிரி இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள்.
தற்போது வெளியாகியுள்ள இந்த படத்தின் டீசர் மூலம், இப்படத்தின் கதை விளையாட்டு, காதல், மற்றும் நகைச்சுவையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது என அறிய முடிகிறது. இந்த படத்தில், கீர்த்தி சுரேஷ் அதிர்ஷ்டம் என்பது இல்லாத பெண்ணாகவும், துப்பாக்கி சூடு வீராங்கனையாகவும் நடித்துள்ளார்.
ஆதி நாடகக் கலைஞராகவும் மற்றும் ஜெகபதி பாபு கீர்த்தி சுரேஷின் பயிற்சியாளராகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் எதை பற்றியும் கவலைபடாத கிராமத்து பெண்ணாக, கீர்த்தி சுரேஷ் நடித்து இருக்கும் விதம் பலரையும் கவர்ந்துள்ளது. ஆதியை துரத்தி துரத்தி காதலித்து, நீ ஜெமினி கணேசன் என்றால் நான் சாவித்ரி என காதல் வசனமும் பேசியுள்ளார்.
படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக முடிந்த நிலையில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.