மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் மசோதாக்கள் மீதான விவாதத்தின் போது, துணைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வேளாண்துறை தொடர்பான விவசாயிகளுக்கான உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் மசோதா, விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா, ஆகியவற்றை மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாக்கள் மீதான விவாதத்தின்போது, மத்திய அரசின் முடிவு விவசாயிகளுக்கு எதிராகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விவசாய நிலத்தை தாரை வார்க்கும் விதமாகவும் இருப்பதாகக் கூறி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதோடு, மசோதாக்களை தேர்வுக்குழுவுக்கு அனுப்பக்கோரி திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது.
ஆனால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மசோதாக்கள் மீதான குரல் வாக்கெடுப்புக்கு அனுமதிக்கப்பட்டதால், தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவைத் துணைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு அங்கிருந்த அவை விதி குறிப்பு புத்தகத்தை கிழித்து எறிந்தனர். அப்போது, துணைத்தலைவர் மேஜையில் இருந்த மைக்கும் சேதமடைந்தது.
இதைதொடர்ந்து, அவை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டு, பிறகு மீண்டும் கூடியதும் நடைபெற்ற குரல் வாக்கெடுப்பின் மூலம், இரு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால், அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சிகள், தங்களது கோரிக்கையை நிராகரித்த துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கிற்கு எதிராக, 12 எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன.
காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 47 உறுப்பினர்கள் இத்தீர்மானத்தை முன்மொழிந்து கையெழுத்திட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, மாநிலங்களவை துணைத்தலைவரை முற்றுகையிட்ட எம்.பிக்களுக்கு எதிராக, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி இன்றைய கூட்டத்தில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், அவை விதிமுறைகளை மீறி அவைத் தலைவரை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் அவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது.