பெங்களூருவில் ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.பி. ஷர்மா, தனது கைத்துப்பாக்கியை சுத்தம் செய்தபோது, அது எதிர்பாராதவிதமாக வெடித்துள்ளது. இதில் மார்பில் குண்டு பாய்ந்து, பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநில காவல்துறை வீட்டு வசதி வாரிய டி.ஜி.பி.யாக பணியாற்றி வருபவர் ஆர்.பி.ஷர்மா. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியான இவர், தனது குடும்பத்தினருடன் பெங்களூரு பகுதியில் வசித்து வருகிறார். இவர் வீட்டில் தனது கைத்துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்து, மார்பில் குண்டு பாய்ந்துள்ளது.
அவரது அறையில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதால், அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரது அறைக்குச் சென்று பார்த்தபோது, அவர் குண்டு பாய்ந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியுள்ளார். உடனடியாக ஊழியர்களின் உதவியோடு, ஆர்.பி.ஷர்மாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மார்பில் இரண்டு குண்டுகள் பாய்ந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் 59 வயதாகும் ஷர்மா, குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கியை சுத்தம் செய்தபோது, தவறுதலாக துப்பாக்கி இயங்கியதில், இந்த சம்பவம் நிகழ்ந்ததாக எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுபற்றி அறிந்ததும், சம்பவம் நடந்த ஆர்.பி.ஷர்மாவின் வீட்டிற்கு, பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சென்று பார்வையிட்டுள்ளனர். மேலும், அவரது குடும்பத்தினரிடமும் விசாரினை நடத்தி உள்ளனர். எனினும் இந்தச் சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.






