நடு இரவு…கொட்டும் மழையிலும் நிற்காத தூய்மை பணி! நெகிழ வைத்த சகோதரி!

நடு இரவு…கொட்டும் மழையிலும் நிற்காத தூய்மை பணி! நெகிழ வைத்த சகோதரி!

இன்று அதிகாலை 3 மணியளவில் சென்னையின் முக்கியப் பகுதியான அண்ணா சாலையில் கொட்டும் மழைக்கு இடையிலும் தூய்மை பணியாளர்கள் தங்களது பணியை தொடர்ந்து வந்தது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிலும் குறிப்பாக ஒரு பெண்மணி கொட்டும் மழையில் தன்னந்தனியே பணி செய்து வரும் காட்சி வைரலாகியுள்ளது.

கனமழை நேரத்தில் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொள்ளலாமே, பணிக்கு வரச் சொல்லி ஏதேனும் அழுத்தம் தரப்படுகிறதா என்று அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த தூய்மைப் பணியாளார் ஒருவர், ” அழுத்தம் தரப்படுவதில்லை. மழைநீர் வடிகால் சீராக இயங்க சாலையில் உள்ள டி-கப் போன்ற குப்பைகளை அகற்றி வருகிறோம். பாதுகாப்புக் கவச உடைகளை அணிந்திருப்பதால் எங்களுக்கு பயமில்லை. அதிக கனமழை பெய்தால் சற்று நேரம் ஒதுங்கிக் கொள்வோம். நாங்கள் இரவில் இறங்கி பணி செய்தால் தான் பகலில் சாலைகள் சுத்தமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

மழை அடித்தாலோ, அச்சுறுத்தும் வகையில் காற்று வீசினாலோ, பயம் கொடுக்கும் இடி இடித்தாலோ பாதுகாப்பான இடங்களுக்கு சென்று விடுவோம் என்று மற்றொரு பெண் தூய்மை பணியாளர் தெரிவித்தார்.

இவ்வாறு தூய்மை பணியாளர்களின் பொறுப்பாளார் பேசுகையில், ” சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது. அச்சுறுத்தும் வகையில் மழை பொழிவு இருந்தால் யாரும் பணி செய்யத் தேவையில்லை என்று கண்டிப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, வழக்கமான துப்புரவுப் பணிகள் நடைபெறவில்லை.நீரில் தென்படும் குப்பைகளை (Litter Waste)கையால் எடுக்கின்றனர். அதற்குத் தேவையான கையுறைகளும் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

சென்னை அண்ணா சாலை மண்டல அதிகாரி இது குறித்து கூறுகையில், ” பணியாளர்களின் நலன்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறோம். தீவிர மழை பெய்து வரும் காரணத்தினால், விடுப்பு கேட்கும் பணியாளர்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கப்பட்டு விடுமுறை வழங்கப்படுகிறது. சாலையில் மழைநீர் தேங்காதவாறு கவனம் செலுத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார்.           

தூய்மை பணிக்கு ஒப்பந்ததாரர் மூலமாக சென்னை மாநகராட்சி பணியாளர்களை ஈடுபடுத்தி வருகிறது. சென்னை மாநகராட்சியில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளார்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.இதில், பாதிக்கும் மேற்பட்டோர் தினந்தோறும் தரப்படும் கூலிக்காக பணிபுரிபவர்களாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *