புதுச்சேரி: ‘பாண்டி மெலாஞ்ச் 2027’ நிகழ்வுகளின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள கலை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி சுற்றுலாத் துறையும் டெக்ஷாட் நிறுவனமும் வழங்கும் ‘பாண்டி மெலாஞ்ச் 2027’ அறிமுக விழா, புதுச்சேரி காந்தி திடலில் அக்டோபர் 16ஆம் தேதி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்று, நிகழ்வின் அதிகாரப்பூர்வ இலச்சினை மற்றும் அடையாளச் சின்னத்தை வெளியிட்டார்.
சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், ‘பாண்டி மெலாஞ்ச் 2027’ நிகழ்வுகளை அறிமுகப்படுத்தும் சிறப்புக் காணொளியை வெளியிட்டார்.
பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள்
விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, வெளிமாநில மக்களை ஈர்க்கும் மாநிலமாகப் புதுச்சேரி திகழ்வதாகக் குறிப்பிட்டார்.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் வந்து செல்லும் வகையிலும், புதுச்சேரியின் சுற்றுலா வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் கலை நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சிகள் மூலம் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மாநாடுகள் முதல் இசை, நடன நிகழ்ச்சிகள் வரை
பண்பாடு, படைப்பாற்றல், கொண்டாட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ‘பாண்டி மெலாஞ்ச்’ திட்டமிடப்பட்டுள்ளது. கலை, இசை, ஆடை அலங்காரம், உணவு, நல்வாழ்வு, மரபு மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம்பெறவுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, 2027 ஜனவரியில் கல்வி, ஆன்மிகம் மற்றும் மருத்துவ மாநாடுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கும் இந்த மாநாடுகளைத் தொடர்ந்து, பிப்ரவரியில் இசை நிகழ்ச்சி, சர்வதேச நடன நிகழ்ச்சி உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன. அறிமுக விழாவையொட்டி நடனம், பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.





