கர்நாடகத்தின் தீர்த்தஹள்ளி வட்டத்தில் உள்ள கொண்ட்லூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், பாடம் நடத்துவதுடன் தனது பணி முடிந்துவிடுவதாக நினைக்கவில்லை ஆசிரியர் எச்.வி.சம்பத். பள்ளி வளாகத்தில் மரங்களை வளர்த்து, அவற்றின் மூலம் பள்ளிக்கே வருமானம் கிடைக்கும் முயற்சியில் சக ஆசிரியர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.
மறைந்த சோசலிசத் தலைவர் சாந்தவேரி கோபால கவுடாவின் பெயரில் இயங்கும் இந்தப் பள்ளியின் எட்டு ஏக்கர் வளாகம், கடந்த 11 ஆண்டுகளில் பசுமையான தோட்டமாக மாறியுள்ளது. பாக்கு, முந்திரி, தென்னை மற்றும் பழ மரங்கள் இங்கு வளர்க்கப்படுகின்றன.
பள்ளி நேரத்துக்கு வெளியேயும் தொடரும் பணி
2015ஆம் ஆண்டு முதல் இப்பள்ளியில் பணியாற்றும் பொறுப்புத் தலைமை ஆசிரியர் சம்பத், அதிகாலையில் வந்து மாலையில் தாமதமாகச் செல்கிறார். நீர்ப்பாசனம், களைகளை அகற்றுதல், தோட்டப் பராமரிப்பு, அறுவடைப் பணிகளைக் கவனிக்கிறார். இதற்காகத் தனது சொந்தப் பணத்தையும் செலவிடுகிறார்.
அவருடன் மற்ற ஆசிரியர்களும் பங்களிக்கின்றனர். ஆங்கில ஆசிரியர் சௌமியா தினமும் காலை 7.30 மணிக்கு வந்து செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுகிறார். மாணவர்களும் ஓய்வு நேரத்தில் தோட்டப் பணிகளில் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.
மரங்களிலிருந்து பள்ளிக்கு வருமானம்
கடந்த மூன்று ஆண்டுகளில் தோட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ₹50,000 முதல் ₹2 லட்சம் வரை பள்ளிக்குக் கிடைத்துள்ளது. வருமானம் பள்ளி வளர்ச்சி மற்றும் மேலாண்மைக் குழுவின் கணக்கில் செலுத்தப்படுகிறது.
இந்த வருவாயை அதிகரித்து, அறிவியல் ஆய்வகம், கணினிகள், மேம்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் தரமான மதிய உணவு வழங்க உதவ வேண்டும் என்பது சம்பத்தின் எதிர்பார்ப்பு. இவை அவரது அடுத்தகட்ட இலக்குகள்.
அவர் விதைப்பது மரங்களை மட்டுமல்ல
சம்பத்தின் முயற்சியில் கவனிக்க வேண்டியது, பள்ளியின் தேவைகளை நிறைவேற்ற ஆசிரியர்கள் சேர்ந்து உருவாக்கிய வழிமுறை. மாணவர்கள் பராமரிக்கும் மரங்கள், அவர்களது பள்ளிக்கே வருமானம் தருகின்றன. உழைப்புக்கும் பொதுநலனுக்கும் உள்ள தொடர்பை அவர்கள் நேரில் காண்கிறார்கள்.
ஒரு பள்ளி வளாகத்தைப் பசுமையாக்கும் செயல், குழந்தைகளுக்கான நடைமுறைக் கல்வியாகவும் மாற முடியும் என்பதை இந்த முயற்சி காட்டுகிறது. அதே நேரத்தில், பள்ளிக்கான அடிப்படை வசதிகள் ஆசிரியர்களின் சொந்தச் செலவை மட்டுமே நம்பியிருக்க வேண்டியதில்லை. சம்பத் போன்றவர்களின் முயற்சிக்கு அமைப்புரீதியான ஆதரவு கிடைக்கும்போதுதான் அதன் பயன் நீடிக்கும்.





