வாஷிங்டன்: அமெரிக்காவின் சுற்றுலா மற்றும் வணிக விசா விண்ணப்பதாரர்களுக்கான ‘விசா பிணைத்தொகை’ திட்டத்தில் 50 நாடுகள் இடம்பெற்றுள்ளன. அதிகபட்சமாக 20 ஆயிரம் அமெரிக்க டாலர் வரை செலுத்த வேண்டிய இந்தப் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை.
அதேவேளையில், தெற்காசிய நாடுகளான வங்கதேசம், பூடான் மற்றும் நேபாளம் ஆகியவை விசா பிணைத்தொகை செலுத்த வேண்டிய நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
யாருக்கு இந்த விதி பொருந்தும்?
அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள விசா பிணைத்தொகைப் பட்டியலில் உள்ள நாடுகளின் கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி, பி-1 அல்லது பி-2 வணிக மற்றும் சுற்றுலா விசாக்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு இந்த விதி பொருந்தும்.
விசா நேர்காணலின்போது விண்ணப்பதாரரின் விவரங்களின் அடிப்படையில் 10 ஆயிரம், 15 ஆயிரம் அல்லது 20 ஆயிரம் டாலர் பிணைத்தொகையைச் செலுத்துமாறு தூதரக அதிகாரி அறிவுறுத்தலாம். அதிகபட்சத் தொகையான 20 ஆயிரம் டாலரின் இந்திய மதிப்பு சுமார் ரூ.18 லட்சமாகும்.
கட்டணம் அல்ல; பிணைத்தொகை
இந்தத் தொகை வழக்கமான விசா விண்ணப்பக் கட்டணம் அல்ல. பயணி விசா விதிகளைப் பின்பற்றி, அனுமதிக்கப்பட்ட காலத்துக்குள் அமெரிக்காவிலிருந்து வெளியேறுவதை உறுதிப்படுத்துவதற்காகப் பெறப்படும் பிணைத்தொகையாகும். நிபந்தனைகள் முறையாகப் பின்பற்றப்பட்டால் தொகை திருப்பித் தரப்படும்.
பிணைத்தொகையைச் செலுத்துவதால் மட்டும் விசா கிடைப்பது உறுதியாகாது. விசா வழங்கத் தகுதியானவர் என்று தூதரக அதிகாரி முடிவு செய்த பிறகே, பிணைத்தொகை செலுத்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல் வழங்கப்படும்.
மோசடி இணையதளங்களிடம் எச்சரிக்கை
தூதரக அதிகாரி நேரடியாக அறிவுறுத்திய பிறகே அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் ‘I-352’ படிவத்தைச் சமர்ப்பித்து, அரசின் Pay.gov தளம் வழியாகப் பணம் செலுத்த வேண்டும். அதிகாரப்பூர்வமாக அனுப்பப்படும் இணைப்பைத் தவிர வேறு இணையதளங்களில் பணம் செலுத்த வேண்டாம் எனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.
இந்தியக் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் தற்போதைய பட்டியலில் இல்லாததால், அவர்களுக்கு இந்தப் பிணைத்தொகை விதி பொருந்தாது. இருப்பினும் வழக்கமான விசா விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற நடைமுறைகள் தொடர்ந்து பொருந்தும்.






