மாஸ்க் அணிந்தபடி நடிகர் ரஜினிகாந்த் காரில் பயணிக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.
தர்பார் படத்தை அடுத்து இயக்குநர் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதத்திலிருந்து ரத்து செய்யப்பட்டது.
இதனிடையே சென்னை திரும்பிய ரஜினிகாந்த், தனது போயஸ் தோட்டத்து வீட்டிலேயே இருந்து வந்தார். கொரோனா பிரச்னை முழுவதும் முடிந்த பின்னர் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை தொடங்கலாம் என்று படக்குழுவிடம் அவர் அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தனது போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து ரஜினிகாந்த் முகக்கவசத்துடன் கார் ஓட்டிச் செல்லும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளத்தில் வெளியாகியது. அவர் ஓட்டிச் செல்வது லம்போர்கினி என்ற சொகுசு கார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த கொரோனா காலத்தில் ரஜினிகாந்த் முகக்கவசம் அணிந்த புகைப்படம் வெளியாவது இதுவே முதல் முறை.