சென்னை: இந்தியப் பெண்களின் கர்ப்பகாலத் தரவுகளின் அடிப்படையில் கருவின் வயதைக் கணக்கிடுவதற்காக உருவாக்கப்பட்ட ‘கர்பிணி-GA2’ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை, 2027–28ஆம் ஆண்டில் மருத்துவப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர ஐஐடி மெட்ராஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தற்போது பயன்படுத்தப்படும் கணக்கீட்டு முறைகள் பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளின் கர்ப்பகாலத் தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. இந்தியக் கருக்களின் வளர்ச்சியில் காணப்படும் மாறுபாடுகளால், குறிப்பாக கர்ப்பத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மும்மாதங்களில், அவற்றின் கணிப்புகளில் வேறுபாடுகள் ஏற்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியத் தரவுகளுக்கான தனி முறை
ஐஐடி மெட்ராஸ் மற்றும் பரிதாபாத்திலுள்ள Translational Health Science and Technology Institute ஆராய்ச்சியாளர்கள் இணைந்து உருவாக்கிய ‘கர்பிணி-GA2’ மாதிரி, இந்தியப் பெண்களின் கர்ப்பகாலத் தரவுகளைக் கொண்டு பயிற்றுவிக்கப்பட்டுள்ளது.
அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில் வழக்கமாக அளவிடப்படும் கருவின் மூன்று அளவுகளைப் பயன்படுத்தி, கர்ப்பகால வயதை இந்த AI மாதிரி கணக்கிடுகிறது. பரவலாகப் பயன்படுத்தப்படும் ‘Hadlock’ முறையுடன் ஒப்பிடும்போது, கணிப்புப் பிழையை ஏறத்தாழ மூன்று மடங்கு குறைத்ததாக ஐஐடி மெட்ராஸ் தெரிவித்துள்ளது.
வேலூர் சிஎம்சி தரவுகளிலும் சோதனை
இந்தத் தொழில்நுட்பம் வட இந்தியக் கர்ப்பிணிகளின் தரவுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டு, தென்னிந்தியாவைச் சேர்ந்த தனித்துவமான தரவுகளைக் கொண்டும் வெளிப்புறச் சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட மருத்துவ நிறுவனங்களின் தரவுகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வில் குருகிராம் அரசு மருத்துவமனை, டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனை, வேலூர் சிஎம்சி மற்றும் புதுச்சேரி மருத்துவ அறிவியல் நிறுவனம் உள்ளிட்டவை பங்கேற்றுள்ளன.
2027–28ல் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முயற்சி
ஐஐடி மெட்ராஸ் வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளியின் தலைவர் பேராசிரியர் பாலராமன் ரவீந்திரன் கூறுகையில், தொழில்நுட்பம் தொடர்ந்து சரிபார்க்கப்பட்டு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் கருவிகளுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றார்.
மருத்துவமனைகளில் நேரடியாகப் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்ப மாற்றம், ஸ்கேன் கருவிகளுடனான இணக்கத்தன்மை மற்றும் பரிசோதனைக்குத் தேவைப்படும் கூடுதல் நேரம் உள்ளிட்ட நடைமுறைச் சவால்கள் தற்போது ஆராயப்பட்டு வருகின்றன. 2027–28ஆம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு ஏற்ற வடிவத்தை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கர்ப்பகால வயது ஏன் முக்கியம்?
கருவின் சரியான வயதைக் கணிப்பது பிரசவத் தேதியைத் தீர்மானிக்கவும், கருவின் வளர்ச்சியை மதிப்பிடவும், குறைப்பிரசவம் உள்ளிட்ட அபாயங்களைக் கண்டறியவும் உதவுகிறது. துல்லியமான கணிப்பு மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் நல மருத்துவர்கள் சரியான சிகிச்சை முடிவுகளை எடுக்கவும் துணைபுரியும்.
‘கர்பிணி-GA2’ மாதிரி புதிதாக இன்று உருவாக்கப்பட்டது அல்ல. இதற்கான ஆய்வு 2024ஆம் ஆண்டிலேயே வெளியிடப்பட்டது. 2027–28ஆம் ஆண்டில் மருத்துவப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படும் என்ற ஐஐடி மெட்ராஸின் தற்போதைய தகவலே புதிய அப்டேட்.






