உலகின் முதல் தனியார் விண்கலம்.. சீறிப் பாய்ந்த பால்கன் 9 ராக்கெட்.. நாசா சாதனை

உலகின் முதல்  தனியார் விண்கலம்.. சீறிப் பாய்ந்த  பால்கன் 9 ராக்கெட்.. நாசா சாதனை

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் உதவியுடன், அமெரிக்காவின் முழுமையான முதல் தனியார் நிறுவன விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு, நாசாவும் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இணைந்து வர்த்தக ரீதியிலான முதல் விண்கலத்தை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி உள்ளது. இதில் நாசாவின் விண்வெளி வீரர்கள் மூவர், ஜப்பான் வீரர் ஒருவர் என 4 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். 

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ டிராகன் எனும் இந்த விண்கல், புளோரிடா மாநிலத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள கேப் கனவெரல் ஏவுதளத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் இந்திய நேரப்படி அதிகாலை 5.57 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. நாசாவின் அங்கீகாரத்துடன் விண்வெளிக்கு மனிதர்களை ஏற்றிச் செல்லும் முதல் தனியார் விண்கலம் இது ஆகும். குறிப்பிட்ட நேரத்தில் இரண்டாம் கட்டமாக ராக்கெட்டில் இருந்து பிரிந்த க்ரூ ட்ராகன் விண்கலம், சரியான முறையில் இலக்கை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளது.

மனிதர்களை சுமந்து செல்லும் இந்த விண்கலம், அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரியது எனக் கூறப்படுகிறது. 27 மணி நேரத்திற்கு அதிகமான பயணத்திற்குப் பிறகு, விண்வெளியை சென்றடையும் விண்கலத்தில் உள்ள வீரர்கள் 6 மாதம் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர்.

ராக்கெட்டில் இருந்து விண்கலம் தனியாக பிரிந்து பயணிக்கத் தொடங்கியதும், ராக்கெட் பூஸ்டர் பூமிக்குத் திரும்பி, கடலில் ஒரு கப்பலில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதனை மறுபடியும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட இந்நிகழ்வினை, அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் நேரில் பார்வையிட்டார். அதிபர் டிரம்ப் மற்றும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பைடனும், விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *