தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
பாஜகவை சேர்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் 2ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலத்தலைவர் எல்.முருகன் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தவர், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.
அப்போது, தமிழகத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்ட பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என தெரிவித்தார். மேலும், தமிழக அரசியலில் 6 மாதங்களில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்றார்.
2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் கணிசமான அளவில் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு செல்வார்கள் எனவும், நாங்கள் கை காட்டும் நபர்களே தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைப்பர் எனவும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.