கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு மார்ச் 24 ஆம் தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மாதாமாதம் சில தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து கொண்டு இருக்கிறது, அந்த வகையில் பொது போக்கு வரத்து, மெட்ரோ ரயிலை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இதன் அடிப்படையில் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி சென்னையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவை அனுமதிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்து இருந்தார்.இதனைதொடர்ந்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் மற்றும் என்ஜினீயர்கள் மெட்ரோ ரெயிலை இயக்குவதற்காக தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்.
மேலும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது அதன்படி, சென்னையில் 32 மெட்ரோ ரெயில் நிலையங்கள் உள்ளன. இந்த ரெயில் நிலையங்களின் நுழைவு வாயிலில் பயணிகளின் கைகளில் கிருமி நாசினி தெளிப்பது மற்றும் உடல் வெப்பநிலையை கணக்கிடுவது போன்ற பணிகளை துரிதமாக செய்ய தனித்தனியாக பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதேபோல டிக்கெட் வழங்கும் தானியங்கி எந்திரங்கள், டிக்கெட்டுகளை ‘ஸ்கேன்’ செய்த உடன் திறக்கும் தானியங்கி கதவுகள், நகரும் படிக்கட்டுகள், லிப்டுகள் போன்றவற்றின் செயல்பாடுகளையும் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
டிக்கெட் வாங்கும் இடம் , பிளாட்பாரங்கள் ஆகிய இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் அடையாளங்கள் வரையும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதேபோன்று ரெயில்களிலும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான விழிப்புணர்வு வாசகங்கள் ஒட்டப்படவுள்ளது. மேலும் பணியாளர்கள் மூலம் பயணிகளுக்கு முறையான அறிவுரைகளும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரெயில் நிலையங்களில் கூடுதல் நேரம் ரெயிலை நிறுத்த வாய்ப்புள்ளதா? கூடுதல் ரெயில்கள் இயக்குவதற்கு சாத்தியம் உள்ளதா? நெரிசலாக பயணிகள் பயணிப்பதை எந்த விதத்தில் தவிர்ப்பது? என்பது குறித்து மூத்த அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களிடம் ஆலோசிக்கப்பட்டு வருவதாக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ‘டிக்கெட் டோக்கன்’ முறை ரத்து செய்யப்படலாம் என்று தெரிகிறது . அதற்கு பதிலாக ‘ஸ்மார்ட் கார்டு’ மற்றும் விமான நிலையங்களில்இருப்பது போன்றுQRCODEஎன்று அழைக்கப்படும் முறை அமல்படுத்தப்பட உள்ளது.இதன் மூலம் பயணிகள் பயண டிக்கெட்டை தங்களது செல்போனில் பெற்றுக்கொள்ளலாம் இதன் மூலம் நேர விரயம் மற்றும் நோய் தொற்று ஆகியவற்றில் இருந்து பயணிகள் தப்பிக்கலாம்.