– மைதிலி சம்பத்
“அம்மா சுரத்தாவே இல்லை பார்த்தியா, கல்யாணி?” என்றான் தன் மனைவியைப் பார்த்து சிவா.
“அதுக்கென்ன பண்றது? உங்கப்பா அதுக்கு மேலே மூஞ்சியைத் தொங்கப்போட்டுண்டு ரூமை விட்டு வெளியவே வரல்ல. பகவத்கீதை புஸ்தகத்தை வெச்சுண்டு ஏதோ துறவி மாதிரி உட்கார்ந்திருக்கார்… இருக்கட்டும். அவளுக்காகவே தெரிய வேண்டாமா? ஏதோ கல்யாணமாகி முதல் வருஷ ஆடிக்கு அம்மா வீட்டுக்குப் போற மாதிரி மூஞ்சியைத் தொங்கப்போட்டுண்டிருந்தா என்ன அர்த்தம்…?
தான் பெத்தப் பசங்களுக்கு ஒத்தாசைக்குத்தானே கூப்பிடறா… சரி, போவோம் என்ற அந்த எண்ணமே வரலியே? பரலோகத்துக்கு இவ ரெண்டுபேரும் சேர்ந்தா போப்போறா?
“இதோ பாரு கல்யாணி! நாம ஒரு முடிவெடுத்தாச்சு. இப்படித்தான் பண்ணப்போறோம்னு. இதுக்கு மேலே ஏதாவது பேசி பாவத்தைக் கொட்டிக்காதே! நாளைக்கு நமக்கு என்ன காத்திண்டிருக்குன்னு நமக்கு என்ன தெரியும்? இப்போ வாயை மூடிண்டு பேசாமே இரு” என்றான் சிவா.
இரண்டு பேருக்கும் இரண்டு நாள் முன்னாடி நிகழ்ந்ததெல்லாம் நினைவுக்கு வந்தது. அன்னிக்கு தம்பி ஹரி வந்திருந்தான். அவன் “நான் அம்மாவை கொஞ்ச நாள் கூட்டிட்டு போகலாம்னு நினைச்சிக்கிட்டிருக்கேன்” என்றான்.
“ஏண்டாப்பா, என்ன விஷயம்?” என்று கேட்டாள் அம்மா.
“பசங்களுக்கு ஸ்கூல் திறந்தாச்சு. கலாவுக்கு மெட்டர்னிடி லீவு முடிஞ்சி அவ ஆபீஸுக்குப் போற வேளை வந்தாச்சு. குழந்தை ரொம்ப சின்னதா இருக்கு. எனக்கு ஆயா, கிரட்ச்ன்னு விடறதுலெல்லாம் கொஞ்சம் கூட இஷ்டமில்லை. அதனாலதான் நீ வந்து இருந்தியானா கொஞ்சம் ஒத்தாசையா இருக்குமே, உன்னைக் கூட்டிண்டு போகலாம்னு நினைக்கிறேன்.” என்றான்.
“அப்பாவையும் தானே?” என்று கேட்டாள் அம்மா.
“இல்லைம்மா! இரண்டுபேரும் வந்தேள்னா இடம் கொஞ்சம் கஷ்டப்படும்னு தோண்றது. அப்பப்போ கலாவோட அப்பா, அம்மா வந்துண்டு போயிண்டிருக்கா. அதனால, இடம் பிராப்ளமாக இருக்குமோன்னு தோண்றது. அதனால, நீ மட்டும் வா” என்றான் ஹரி.
அதற்குள் கல்யாணி சிலிர்த்துக்கொண்டு வந்தாள். “சரி, நீங்க இரண்டு பேரையும் கூட்டிண்டு போயிட்டா, சாயந்திரம் என் பசங்க ஸ்கூல்லேருந்து வந்தா என்ன பண்ணுவா? இவா இருக்கறதுனால குழந்தைகள் வந்தா சாப்பாடு போட்டு கவனிச்சுக்கறா. அந்த நிம்மதிலதான் நான் ஆஃபீஸ் போயிட்டு வரேன். இப்ப அதிலேயும் மண்ணைப் போடப்பாக்கிறியா?” என்றாள் அவள்.
“அதுக்குத்தான், அப்பாவை நீங்க வெச்சுக்கோங்க, நான் அம்மாவை மட்டும் கூட்டிண்டு போறேன்” என்றான் ஹரி.
இத்தனை நேரம் பேசாமல் இருந்த ராகவன் வாயைத் திறந்தார். “இதோ பாருடா, ஒரு கதை சொல்லுவா. குருடன் முடவனைத் தூக்கிண்டு போனான்னு. அந்த மாதிரி அவளுக்கு கண்ணே சரியாத் தெரியல்லே. எனக்கானா நடக்க முடியல்லே. இப்படி நொண்டியும் முடமுமா ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசையா காலத்தைத் தள்ளிட்டிருக்கோம். எங்களை ஏண்டாப்பா ஆளுக்கு ஒரு பக்கம் இழுக்கறேள்?” என்றார் வருத்தத்தோடு.
“அதனால் என்னப்பா, உள்ளூர்தானே? அப்பப்ப வந்து பார்த்துண்டாப்போச்சு” என்றான் சிவா.
“அப்பாவும் நேரத்துக்கு சாப்பிடணும்” என்று அம்மா இழுக்க, “ஏன், நீங்க இல்லாட்டா அப்பாவுக்கு நான் நேரத்துக்கு பார்த்து போடமாட்டேனா? என்மேல் நம்பிக்கை இல்லையா?” என்று பொரிந்தாள் கல்யாணி. சரி, இதற்கு மேல் பேசி பிரயோஜனமில்லை என்று வாயை மூடிக் கொண்டுவிட்டாள் ராஜம்மா.
ஹரி நிம்மதியாக இன்னும் இரண்டு நாட்களில் வந்து கூட்டிப்போகிறேன் என்று சொல்லிவிட்டு புறப்பட்டுப் போய்விட்டான்.
ராஜம்மாவிற்கு மூஞ்சி தொங்கிப்போய்விட்டது. அதேபோலத்தான் ராகவனும் இருந்தார். அவர்கள் இரண்டுபேரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல், யாருடனும் பேசாமல் இரண்டு நாட்கள் தள்ளினார்கள், அழுதுகொண்டிருந்திருப்பார்கள் போலிருக்கிறது. அதுதான் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று ஒதுங்கியே இருந்தார்கள். முன்றாம் நாள் காலை சீக்கிரமாக எழுந்து சமையல் எல்லாம் முடித்து காத்திருந்தாள் கல்யாணி. தாமதமாகத்தான் வந்தான் ஹரி.
அதுக்குள்ளே இவர்களுடைய அத்தை, அதாவது ராகவனுடைய தங்கை வசந்தா வந்துவிட்டாள். “என்ன மன்னி, நீ என்னமோ சின்ன பிள்ளையோட போய் இருக்கப்போறியாமே?” என்று கேட்டாள்.
“ஆமாம் அப்படித்தான் சொல்லிண்டிருக்கா” என்றாள் ராஜம்மா.
“சரி, இரு! ஹரியும் வரட்டும் பேசிக்கலாம்” என்றாள் வசந்தா.
அப்போதுதான் ஹரியும் வந்து உட்கார்ந்தான். “ஏண்டாப்பா, எப்படியிருக்கே? என்று கேட்ட வசந்தா தொடர்ந்தாள். “அம்மாவை கூட்டிண்டு போகப்போறியாமே? இப்போ அவா இரண்டு பேரையும் பிரிக்கறது அவசியமாடா” என்று நேரிடையாகவே அவனிடம் கேட்டாள்.
“எங்களுடைய கட்டாயம் அது. என்ன பண்றது? எனக்குக் குழந்தையைப் பார்த்துக்கறதுக்கு அம்மா வேணும். இங்க குழந்தைகளைப் பார்த்துக்க அப்பா இருப்பார். என் குழந்தை சின்னது தானே? அதைப் பார்த்துக்கத்தான் அம்மாவை அழைச்சிண்டு போறேன். இதுல என்ன தப்பு?” என்று கேட்டான் ஹரி.
“ஏண்டா, இந்த வயசான காலத்தில அவங்களைப் பிரிக்கறமேங்கற குற்ற உணர்ச்சியே உங்களுக்கு இல்லையா? சரி, நீ வந்தப்புறம் உங்கிட்டே பேசிட்டு போகணும்னு உட்கார்ந்திருக்கேன். அங்கே உங்க அத்திம்பேர் எதுவும் சாப்பிடாமே உட்கார்ந்திருப்பார். நான் 11 மணிக்கெல்லாம் வந்துடறேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்.
ஆமாம், உனக்கேன் இத்தனை லேட்டாச்சு?”
“அதுவா, எங்க பக்கத்தாத்துக்காரா நாலு வருஷமா எங்களோட நன்னா பழகிட்டா. இப்ப அவாளுக்கு ராஜமந்திரிக்கு மாற்றாலாயிடுத்து .அவா கிளம்பறச்சே ரொம்ப வருத்தமா இருந்தது. மூடு அவுட்டாயிடுத்து. சரி, அவங்களை அனுப்பிச்சுட்டு உடனே கிளம்பிவர்றோம். அதான் லேட்”
“ஓஹோ! நாலு வருஷம் பழகினவாளை விட்டுப் பிரியறது உங்களுக்கு அவ்வளவு கஷ்டமாயிருக்கு, இல்லையா? சரி, போகட்டும்… ஏண்டா அப்பாவும் வந்தா இடம் போறாதுன்னு சொன்னியாமே? இருக்கிற இடத்திலே எல்லாரும் அட்ஜெஸ்ட் பண்ணிண்டு இருக்கறது தான் குடும்பம். நாங்க சின்னவாளா இருக்கச்சே இன்னும் இரண்டு அக்கா, அப்பா, அம்மா எல்லாரும் ஒண்ணாத்தான் இருந்தோம். அதுதான் உறவு, சமூக அட்ஜெஸ்ட்மென்ட். நாளைக்கு நமக்கு ஒண்ணுன்னா யார் ஒத்தாசைக்கு வருவா?”
“அது சரி, அத்தை! அது அந்தக் காலத்துக்கு சரி. இந்தக் காலம் எல்லாம் நியூக்ளியர் ஃபேமலி அத்தை.”
“அது சரி, நியூக்ளியர் ஃபேமலின்னாக்கூட உங்களுக்கு திடீர்ன்னு அம்மா வேண்டியிருக்கே? நியூக்கிளியர் ஃபேமலியாகவே மெயின்டெயின் பண்ண வேண்டியதுதானே?” அம்மாவும், அப்பாவும் குழந்தைகளைப் பார்த்துக்க வேண்டியிருக்கே. இது கொஞ்சம்கூட நன்னாயில்லை. நான் சொல்றதைக் கேளு என்று “ஒரு பெரிய யானைப்படம் ஒன்றைக் காண்பித்தாள்.”
இந்த யானைக்கு 58 வயசாறது. போபால் ஜூல இருக்கு. அதுக்குத் துணையா ஒரு பெண்யானை இத்தனை வருஷமா அதுகூடவே இருந்தது. ஆனா கேன்ஸர் வந்து அந்த பெண் யானை சமீபத்தில செத்துப்போச்சு. அதோட பிரிவைத் தாங்கிக்கமுடியாத அந்த ஆண் யானை, தறிகெட்டு நடக்க ஆரம்பிச்சு, கிட்டத்தட்ட மதம் பிடிக்கிற அளவுக்கு வந்துடுத்து. ஜூ அதிகாரிங்க என்னென்னவோ பண்ணிப்பார்த்தாங்க. சரியாகல. அதுக்கு நிறைய பெரிய பெரிய பொம்மை எல்லாம் குடுத்துப்பார்த்தாங்க. ஒரு குளம் வெட்டி வெளையாடவிட்டாங்க. அது சரியாகவே ஆகல.
அதனால, மல்லிகாங்கற இன்னொரு பெண்யானையை இதோடு சேர்த்துவிட்டாங்க. ஆனா, இந்த யானைக்கு மல்லிகாவைக் பிடிக்கல. அதோட சண்டைப்போட்டு அதைக் சாகடிச்சிடுத்து. இப்ப ம்யூசிக் தெரபின்னு ஆரம்பிச்சு முயற்சி பண்ணிகிட்டுருக்காங்கன்னு பேப்பர்ல போட்டுருக்கு.
ஆக, தன்னோட துணையைப் பிரிஞ்சது ஒரு ஐந்தறிவு படைச்ச மிருகத்தாலேயே தாங்கிக்க முடியல… அதை அப்படியே விட்டுடலாம்னு ஆறறிவு படைச்ச மனுஷனும் நினைக்கல. எப்படியாவது முயற்சி பண்ணி அதைக் காப்பாத்தணும்னு தான் நினைக்கிறான்… இப்படி இருக்கு உலகம். நீங்க என்னடான்னா பெத்த அப்பா, அம்மாவை ஆளுக்கொரு பக்கம் இழுக்கறீங்களே? ஐந்து வருஷம் பழகின உங்கப் பக்கத்துவீட்டு மனுஷாளை பிரியறது உங்களுக்குப் பிடிக்கல்லே.
இடம் போறாதுன்னு சொன்னியாமே நீ? ஏண்டா, உங்கம்மா ரொம்ப குட்டி ஃபிரேம்… ஹைட்டும் குறைச்சல், வெயிட்டும் குறைச்சல். ஆனா, உங்கப்பா எப்படியிருக்கார்? ஆறடிக்கு, ஆகிருதியா பெரிய ஃபிரேமோட இருக்கார். குழந்தை எத்தனை பெரிசு இருக்குமோன்னு கவலைதான் பட்டுட்டிருந்தா எங்கம்மாவே. குழந்தை பெரிசாத்தான் இருக்குன்னு டாக்டர் சொல்லிட்டார். இத்தனை சின்ன ஃபிரேமுக்குள்லே பெரிய குழந்தை இருக்கே, இடம் பத்தல்லேன்னு இரண்டு மூணு மாசத்துக்கு முன்னாடியே இறக்கி வெச்சுட்டாளா உங்க அம்மா? பத்துமாசமும் சுமந்துதானே உங்க இரண்டு பேரையும் பெத்தெடுத்தா. நீங்க இரண்டு பேருமே நல்ல வெயிட்.
ஆனா, உங்கம்மா பிரசவத்துக்கு அப்பறம் ரொம்பவே தளர்ந்து போயிட்டா. டேய்! உங்க அம்மா உங்க அப்பாவைக் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடியே அவ எனக்கு ஃபிரண்டுடா. குடும்பத்துக்கு எவ்வளவோ செஞ்ச்சிருக்கா. இப்படி வயசான காலத்திலே ஒருதருக்கொருத்தர் துணையா இருக்கவேண்டிய சமயத்தில இவங்களை பிரிக்கிறீங்களே? நீங்க இரண்டுபேரும் ஒரு இரண்டு நாள் ஒருத்தரைவிட்டு ஒருத்தர் பிரிஞ்சிருப்பீங்களா? ஏண்டிம்மா! நான் கேக்கறேன், உங்கம்மாவைக் கொண்டு வெச்சுக்கறதுதானே?”
“அது அத்தை, அப்பாவுக்கு பி.பி., ஷுகர் எல்லாம் இருக்கு. அவருக்கு பார்த்து பார்த்து டயத்ல மருந்துக் குடுக்கணும், அப்பாவுக்கு இங்கேல்லாம் வந்து இருக்க சரிப்படாது, அதனால்தான் அது நடக்கல்லே” என்றாள் ஹரியின் மனைவி.
“நியாயம்தான். ஆனா, உங்கப்பா, அம்மா பிரியக்கூடாதுன்னு நினைக்கிற நீ இப்படி இவங்களைப் பிரிக்க நினைக்கலாமா? அது தப்பில்லையா? இதுக்கு நான் ஒரு தீர்வு சொல்லட்டுமா? இதோ பார், இது ஒரு பெரிய காம்ப்ளெக்ஸ். ரொம்ப நிறைய வீடுகள் இருக்கு. நிச்சயமா காலி வீடு ஏதாவது இருக்கும். நீங்க இப்ப இருக்குறது வாடகை வீடுதானே. அதைக் காலிபண்ணிட்டு இங்க சிவா வீட்டுப் பக்கத்துலேயே குடி வந்துடுங்கோ. பசங்களை பெரியவா பார்த்துப்பா. பெரியவா ஒருத்தரை ஒருத்தர் பிரியாமே சந்தோஷமா இருக்கலாம்.
அதனால, இரண்டு பேரையும் பிரிக்கறதுங்கறதை மனசால கூட நினைக்காதே. அது முடியாதுன்னா, சொல்லு, நான் என் அண்ணா மன்னியை எங்கூட கொண்டு வெச்சுக்கறேன். என் வீடு மட்டும் என்ன பெரிய மாளிகையா.? ஆனா, வயசான தம்பதிகளைப் பிரிக்கக்கூடாதுங்கற மனசு எனக்கிருக்கு. நாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்குவோம். நாளைக்கு இயற்கையின் முடிவு எப்படியோ அப்பப் பார்த்துக்கலாம். என் மேல உங்களுக்கு ரொம்பப் பிரியம், மரியாதை. எனக்கு உங்களுக்கு சொல்ல கடமையும், உரிமையும் இருக்குங்கற நம்பிக்கையினால்தான் இதெல்லாம் சொல்றேன். இன்னிக்கே யோசிச்சு ஒரு முடிவு சொல்லுங்க” என்றாள் வசந்தா.
“நீங்க சொல்றது எல்லாமே நிஜம்தான் அத்தை. நாத்தனாராக இருந்து உங்களுக்கு இருக்கிற இந்த நல்ல மனசு, பிள்ளைகளான எங்களுக்கு இல்லாமே போயிடுத்து. மன்னிச்சுக்கோங்கோ, அத்தை “என்றான் ஹரி
“குடும்பம்ன்னா நாலும்தான் இருக்கும். விடுடா. அதான் இப்ப மனசு மாறிட்டேளே, சந்தோஷம்” என்று வசந்தா சொல்ல, “இப்பவே நாங்க வீடு தேட கிளம்பறோம், அத்தை. ரொம்ப நன்றி” என்றான் ஹரி.
அவர்களைத் தட்டிக்கொடுத்த வசந்தா, நிறைந்த மனசுடன் உள்ளே திரும்பினாள். அங்கே இருந்த அவள் மன்னி ராஜம்மா கண்களாலேயே அவளுக்கு நன்றி சொன்னாள்.
– கதைப் படிக்கலாம் – 94
இதையும் படியுங்கள் : ‘காதலா காதலா’