காஞ்சிபுரத்த்தில் இருந்து மும்பைக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.10 கோடி மதிப்பிலான செல்போன்களை, துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துச் சென்ற கும்பல் மத்தியப் பிரதேசத்தில் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி மாலை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் செல்போன் நிறுவனத்தில் தயாரான, 10 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் கண்டெய்னர் லாரி மூலம் மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டன.
கண்டெய்னர் லாரி மறுநாள் ஆந்திர மாநிலம் நகரி அருகே சென்றபோது, தேசிய நெடுஞ்சாலையில் மற்றொரு லாரியில் வந்து முகவரி கேட்பது போல் வந்து கண்டெய்னரை இடைமறித்த கொள்ளையர்கள் துப்பாக்கியை காட்டி ஓட்டுனரை மிரட்டி, அவரை கட்டிப்போட்டு விட்டு 10 கோடி ரூபாய் மதிப்பிலான மொத்த செல்போன்களையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக ஆந்திர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட நிகழ்விற்கு 2 வாரங்களுக்கு முன்னதாக, கர்நாடக எல்லையை ஒட்டிய பாலமனெர்(Palamaner) பகுதியில் ஒரு லாரியையும், ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் ஒரு லாரியையும் இதேபோன்று மடக்கி ஒரு கும்பல் கைவரிசையை காட்டியது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அந்த கொள்ளைச் சம்பவத்தில் மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் பகுதியைச் சேர்ந்த சிலர் ஈடுபட்டு இருந்ததும் போலீசாருக்கு தெரிய வந்தது. இதைதொடர்ந்து, தனிப்படை போலீசார் ஆகஸ்ட் 30ம் தேதியன்று தேவாஸுக்கு சென்று அங்கேயே தங்கியிருந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
உள்ளூர் போலீசாருடன் இணைந்து நடத்திய விசாரணையில், அங்குள்ள கஞ்சர்பட்ஸ் எனும் கொள்ளைக் கும்பல் நவீன தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி, தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் வாகனங்களுக்குள் பூட்டை உடைத்து நுழைந்து, அதிலுள்ள பொருட்களை கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டிருப்பதை கண்டறிந்துள்ளனர். இதுதொடர்பாக, ஆந்திரா,கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் கண்டறியப்பட்டது.

தொடர்ந்து, அந்த கொள்ளை கும்பலை தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்த போலீசார், அவர்களது சமீபத்திய நடவடிக்கைகளையும், வங்கிப் பரிவர்த்தனைகளையும் கண்காணிக்க தொடங்கினர். இதன்மூலம் செல்போன்களை கொள்ளையடித்தது கஞ்சர்பட்ஸ் கும்பல் தான் எனவும், கொள்ளைச் சம்பவத்திற்குப் பிறகு கடப்பா, பெல்லாரி வழியாக அவர்கள் மகாராஷ்டிராவை அடைந்ததும் உறுதி செய்யப்பட்டது.
விசாரணையின் முடிவில், மகாராஷ்டிராவை சேர்ந்த மென்பொறியாளர் ராம் காட் என்பவனின் தலைமையிலேயே இந்த கொள்ளைச் சம்பவம் அரங்கேறியது உறுதிபடுத்தப்பட்டது.
இதையடுத்து, ராம் காட்டையும் அவனது கூட்டாளிகளான ரோஹித் ஜல்லா, அங்கித் ஜான்ஜா ஆகியோரையம் கைது செய்த போலீசார், புனேவில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த கொள்ளையடிக்கப்பட்டதில் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 7,522 செல்போன்கள் பறிமுதல் செய்தனர். மேலும், 2 ட்ரக்குகள், ஒரு கார், 4 இரு சக்கர வாகனங்களை கைப்பற்றிய போலீசார், கொள்ளையில் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்டோரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.
கைதான நபர்களிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. வேறு எந்தெந்தக் கொள்ளை சம்பவங்களில் இந்த கும்பல் ஈடுபட்டுள்ளது என்பது விசாரணைக்குப் பின் தெரிய வரும் என ஆந்திர போலீசார் தெரிவித்துள்ளனர்.




