– லிடியா இம்மானுவேல்
அதிகாலை நேரத்தில் மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேஷன் மிகவும் அமைதியாக இருந்தது. ஊரடங்கு காலமென்பதால் எந்தவித ரயில் போக்குவரத்து மற்றும் பிரயாணிகளின் கூட்டம் எதுவும் இல்லாததால், முழு ரயில்வே ஸ்டேஷன் எங்கும் நிசப்தமாக இருந்தது. ஆனால் மரங்களின் மேலேயும், ரயில் நிலைய கூரைகளின் மீதும் பறவைகள் அமர்ந்திருந்தன!. சில பறவைகள் பறந்துக் கொண்டிருந்தன!
பறவைகளின் கூக்குரல் சப்தம் எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. பறவைகளின் அந்த சப்தம் அந்தக் காலை வேளையில் மிகவும் இனிமையாகவும், மனதுக்கு இதமாகவும் இருந்தது!. ரயில் நிலையத்தின் வாட் பாடங்களில் பலதரப்பட்ட பறவைகளின் சிறகுகள் உதிர்ந்து கிடந்தன.
அந்த ரயில் நிலையத்தின் கடைசி பிளாட்ஃபாரத்தில், எந்த ரயில் வண்டிகளும் எப்பொழுதுமே நிற்காததால், மயிலாடுதுறை பொதுமக்களின் நிறையபேர், காலை மாலை வேளைகளில் அந்த பிளாட்ஃபாரத்தில் வாக்கிங் போவது அன்றாட நிகழ்ச்சிகளில் ஒன்றாகிவிட்டது.
பிளாட்ஃபாரத்தின் ஓரத்தில் மெதுவாக நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் மகேந்திர பாபு. ஸ்போர்ட்ஸ் பேண்ட் மற்றும் வெள்ளை நிற டி-ஷர்ட்டும் அணிந்திருந்த மகேந்திர பாபுவுக்கு, ஐம்பது வயதிருக்கும். மாநிறத்தில் இருந்தாலும், எப்பொழுதும் பார்ப்பதற்கு சுமார்ட் ஆக காட்சியளிப்பார். திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் உயர் அதிகாரியாக வேலை செய்துக்கொண்டிருந்த மகேந்திர பாபு, மயிலாடுதுறைக்கு மாற்றலாகி வந்து, நான்கு ஆண்டுகள் ஆகின்றது.
வழக்கமாக உற்சாகமாக நடந்து வரும் மகேந்திர பாபு, இன்று இனம் புரியாத ஒரு சோகத்துடன் காணப்பட்டார். அதற்குக் காரணம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய ஒரே மகன் விஜய், இதே நாளில் இறந்துப் போனதுதான். இன்ஜினியரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்த விஜய், நண்பர்களுடன் சேர்ந்து திருச்சி உய்யகொண்டான் வாய்க்காலில் குளிக்க சென்றபோதுதான், அந்த விபரீதம் நடந்தது.
வாய்க்காலின் ஆழமான பகுதியில் மூழ்கிவிட்ட நண்பனை காப்பாற்ற சென்ற விஜய்யும், விற்பனைக்கு மணல் தோண்டப்பட்ட ஆழமான அந்தப் பகுதியில் மாட்டிக்கொண்டு இறந்து விட்டான். மகன் இறந்த சோகத்தையும், அந்தத் துயரமான சூழ்நிலைகள் போன்றவற்றை மாற்றவே, திருச்சியில் இருந்து சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு மாற்றல் கேட்டு வந்துவிட்டார் மகேந்திர பாபு.
தன் மகன் இறந்த தினத்தன்று திருச்சிக்கு சென்று காவிரிக்கரையில் உள்ள அம்மா மண்டபத்தில் திதி போன்ற சடங்கு சம்பிரதாய காரியங்களை செய்துவிட்டு, பத்து பதினைந்து ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க திட்டமிட்டு இருந்தார் மகேந்திர பாபு. ஊரடங்கு காலமென்பதால் எதுவுமே செய்ய முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டு விட்டதை நினைத்து, மனவேதனையுடன் ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்த மகேந்திர பாபு, அங்கே இருந்த ஒரு பெரிய மரத்தடியில் ஒரு சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்து விட்டார்.
தினமும் வாக்கிங் முடிந்து போகும் பொழுது, சைக்கிள் கேனில் வைத்து விற்பனை செய்யும் சுக்கு காபியை ஒரு பெரியவரிடம் வாங்கிக் குடிப்பது வழக்கம். இன்றும் அந்தப் பெரியவர் கொடுத்த சுக்கு காபியை வாங்கிக் குடித்துக் கொண்டு மிகவும் சோகத்துடன் அமர்ந்திருந்தார் மகேந்திர பாபு.
ஒரு நடுத்தர வயது பெண்மணி ஒருவர், தலையில் கூடையுடன் நடந்து வந்தவர், மகேந்திரா பாபுவை பார்த்து, ஐயா ஒரு கையை கொடுத்து இறக்கி வையுங்கள் என்று கூறினார்.
அந்தப் பெண்மணியின் கூடையை இறக்கி வைக்க உதவிய பின்பு, மீண்டும் வந்து பெஞ்சில் அமர்ந்துக் கொண்டார் மகேந்திர பாபு.
ஊரடங்கு காலமென்பதால், தக்காளி, எலுமிச்சை போன்ற உணவு வகைகளை விற்பனை செய்ய, வீட்டில் தயாரித்துக் கொண்டு வந்து இருந்தார் அந்தப் பெண்மணி. அந்தப் பெண்ணையும் உணவுப் பொட்டலங்களையும் பார்த்த மகேந்திர பாபுவுக்கு திடீரென்று மின்னலென ஒரு யோசனை தோன்றியது!.
வேகமாக எழுந்த மகேந்திர பாபு, அந்தப் பெண்மணியிடம் சென்று, “அம்மா இந்த உணவு பொட்டலங்கள் விற்பனைக்கு தானே”? என்றார்.
“ஆமாங்கய்யா… தக்காளி, எலுமிச்சை சாதம் இருக்கின்றன, ஒரு பொட்டலம் 20 ரூபாய். உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார் அந்தப் பெண்மணி!
“இந்தக் கூடையில் எத்தனைப் பொட்டலங்கள் இருக்கின்றன?. அப்படியே வேண்டும் எனக்கு” என்றார் மகேந்திர பாபு.
இன்ப அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண்மணி, என்னங்க ஐயா சொல்றீங்க… இந்த கூடையில் முப்பது பொட்டலங்கள் இருக்கின்றன என்று கூறினார்.
முழுவதையும் நான் வாங்கிக் கொள்கிறேன். நீ அப்படியே ஒரு உதவி செய்ய வேண்டும். இந்த உணவுப் பொட்டலங்களை… உணவு இல்லாத ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும். எங்கே கொடுப்பது என்றார் மகேந்திர பாபு.
ஐயா ஸ்டேஷனுக்கு பக்கத்திலேயே வடநாட்டுக்காரங்க, பிழைக்க வந்த ஏழை தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்கள் என்றார், அந்தப் பெண்.
சிறிது நேரத்தில் அந்தப் பெண்மணியுடன் நடந்துச் சென்ற மகேந்திர பாபு, அந்த வடநாட்டு ஏழைத் தொழிலாளர்களுக்கு உணவு பொட்டலங்களை எடுத்துக் கொடுத்தார். 30 உணவு பொட்டலங்களுக்கு, 600 ரூபாயை எடுத்து அந்தப் பெண்மணியிடம் மகேந்திர பாபு கொடுத்தார்.
அந்தப் பெண்மணி கண்ணீருடன் பணத்தை பெற்றுக் கொண்டார். உன் வியாபாரத்திற்கு தானே நான் பணம் கொடுக்கிறேன். ஏன் அம்மா நீ கண்ணீர் விடுகிறாய் என்று மகேந்திர பாபு அந்தப் பெண்மணியிடம் கேட்டார்?.
“ஐயா இன்றைக்கு என்னுடைய 10 வயது மகனுக்கு பிறந்தநாள், “அம்மா சீக்கிரம் வியாபாரத்தை முடித்துவிட்டு வந்து, என்னை கோவிலுக்கு கூட்டிட்டுப் போ, பெரிய கேக் வாங்கிக் கொடு, பாயசம் செய்துக் கொடு!” என்று சொல்லி அனுப்பி வைத்தான், என் பிள்ளை.
நீங்கள் தெய்வம் போல வந்து எனக்கு உதவி செய்து இருக்கிறீர்கள்”! என்று கூறினாள் அந்தப் பெண்!.
“அதெல்லாம் ஒன்றும் இல்லை. நீ தான் எனக்குப் பெரிய உதவி செய்து இருக்கிறாய்!
நான் மிகவும் மகிழ்ச்சியுடன், மன நிம்மதியுடன் வீட்டுக்குப் போகிறேன் என்று கூறினார் மகேந்திர பாபு!.
தனது மன வேதனைகளை வெளிக்காட்டிக் கொள்ளாத மகேந்திர பாபு, இனம் புரியாத ஒரு மன நிறைவுடன், மகிழ்ச்சியுடன், அவருடைய வீடு நோக்கி நடக்கத் தொடங்கினார்!!!…
– கதைப் படிக்கலாம் – 139
இதையும் படியுங்கள் : சவக்குழி