எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய க்ளஸ்டர் மாடல் காரின் விலை இந்தியாவில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய க்ளஸ்டர் மாடல் காருக்கான முன்பதிவு கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் 28.98 லட்ச ரூபாய் மதிப்பில் அறிமுகம் செய்யப்பட்ட எம்ஜி க்ளஸ்டர் மாடல் காரை வாங்க சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இதுவரை முன்பதிவு செய்து உள்ளனர்.
இதன் காரணமாக, இந்தியாவில் இந்த ஆண்டிற்கான எம்ஜி க்ளஸ்டர் மாடல் காரின் அனைத்து யூனிட்களும் விற்றுத்தீர்ந்து உள்ளன. இந்நிலையில், எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது க்ளஸ்டர் எஸ்யுவி மாடல் விலையை ரூ.1 லட்சம் வரை உயர்த்தி உள்ளது. மேலும், இதன்பின் மேற்கொள்ளப்படும் முன்பதிவுகளை புதிய விலையில் மேற்கொள்ள எம்ஜி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
க்ளஸ்டர் மாடல் சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் மற்றும் சேவி என நான்கு ட்ரிம்களில் கிடைக்கிறது. இது ஆறு மற்றும் ஏழு இருக்கை கொண்ட வேரியண்ட்களில் கிடைக்கும் நிலையில், தற்போதைய விலை உயர்வு அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் அடிப்படை மாடல் விலை ரூ. 1 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் மிட், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் வேரியண்ட்கள் முறையே ரூ. 50 ஆயிரம் மற்றும் ரூ. 30 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. டாப் எண்ட் சேவி மாடல் ரூ. 20 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.