தூத்துக்குடியில் கோரிக்கை மனு அளித்த ஒரு மணிநேரத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு முதல்வர் அரசுப்பணி வழங்கியதால் அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாற்றுத்திறனாளி பெண்
தூத்துக்குடியில் இன்று காலை ரூ.367.75 கோடி திட்டப் பணிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். பின்னர், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ 16 கோடியில் அமைக்கப்பட்ட புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் நேரியல் முடுக்கி என்ற நவீன கருவியின் செயல்பாட்டைத் தொடங்கி வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றார்.
அப்போது வழியில் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் அருகில் சாலையோரம் கையில் மனுவுடன் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் நின்றிருந்ததைக் கவனித்த முதல்வர் காரை நிறுத்தச் சொல்லி அப்பெண்ணை அழைத்தார். அப்போது, அந்த பெண் முதல்வரிடம் மனு ஒன்றை அளித்தது.
அரசு வேலை
அதில், முத்தையாபுரத்தைச் சேர்ந்த மாரீஸ்வரியாகிய தனது கணவர் சின்னத்துரை கூலி வேலை பார்ப்பதாகவும். தங்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை இருப்பதாகவும், கணவரின் கூலி வேலை வருமானம் குடும்பத்துக்கு போதாததால் தனக்கு ஒரு வேலை வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மனுவைப் பெற்றுக் கொண்ட முதல்வர், அப்பெண்ணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்தார். பின்னர், சுகாதாரத்துறையின் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வார்டு மேலாளர் பதவிக்கான பணி நியமன ஆணையை முதல்வர் அப்பெண்ணிடம் வழங்கினார்.

ஒரு மணிநேரம்
பின்னர், அந்த பெண்ணிடம் இந்தப் பணியின் மூலம் மாதம் ரூ.15,000 ஊதியமாகக் கிடைக்கும் என்றும், எனவே இந்த ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என அப்பெண்ணுக்கு அறிவுரை கூறினார்.
கோரிக்கை மனு அளித்த ஒரு மணி நேரத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்ட சம்பவம் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




