மின்சாரா பயன்பாட்டை அளவிட வரும் ஊழியர்களிடமே பயனாளர்கள் கட்டணத்தை செலுத்துவதற்கான வசதியை அறிமுகப்படுத்த, தமிழ்நாடு மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மின்சார பயன்பாடு மின்வாரிய ஊழியர்களால் நேரடியாக பயனளர்களின் விடுகளுக்கே சென்று, கணக்கிடப்பட்டு அதற்கான கட்டணமும் அட்டைகளில் குறிப்பிடப்பட்டு வருகிறது.
அதைதொடர்ந்து, குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது மின் வாரிய அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ பயனாளர்கள் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். அதேசமயம், தனியாக வசித்து வரும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு கட்டணம் செலுத்துவதில் பல வித சிக்கல்கள் ஏற்படுகின்றன.

இந்நிலையில் பயனாளர்களின் தேவையற்ற அலைச்சலை தவிர்க்கும் விதமாக, கட்டணத்தை வசூலிப்பதற்கான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த தமிழ்நாடு மின்சார வாரியம் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய தகவலின்படி, மின்சார பயன்பாட்டை கணக்கிட வரும் ஊழியர் மின் கட்டணத்தை குறித்ததும், அவரிடம் உள்ள ஸ்வைப்பிங் இயந்திரத்தின் மூலம் டெபிட் கார்ட் அல்லது கிரெடிட் கார்டை பயன்படுத்தி கட்டணத்தை உடனடியாக செலுத்தும் வசதியை ஏற்படுத்த தமிழக மின்சார வாரியம் ஆலோசித்து வருகிறது.
சோதனை முயற்சியாக சென்னை மாநகராட்சியில் மட்டும் முதலில் இத்திட்டத்தை அமல்படுத்த உள்ளதாகவும், வரவேற்பை பொறுத்து தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




