தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து கடந்த மூன்று தினங்களில் இதுவரை 3.14 லட்சம் நபர்கள் பயணம் செய்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை
தீபாவளிக்கு முன் நவம்பர் 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளிலும் தீபாவளிக்கு மறுநாள் 15,16,17 மற்றும் 18 ஆகிய தேதிகளிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார்.
இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவ.11 முதல் 13 வரையில், தினசரி இயக்கக்கூடிய 2,000 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளாக 3,510 பேருந்துகள் என மூன்று நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக, சென்னையிலிருந்து 9,510 பேருந்துகள், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 5,247 சிறப்புப் பேருந்துகள் என மொத்தமாக 14,757 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி கடந்த மூன்று நாட்களில் சிறப்புப் பேருந்துகளில் பொதுமக்கள் அதிக அளவில் சென்றனர்.
3.14 லட்சம்
போக்குவரத்துத் துறையின் சார்பில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்புப் பேருந்துகளில் இன்று மாலை 3 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,000 பேருந்துகளில் 1,308 பேருந்துகளும், 371 சிறப்புப் பேருந்துகளுமாகக் கடந்த 11-ந் தேதி முதல் இன்று மாலை 3 மணி வரையில் மொத்தம் 6,869 பேருந்துகளில் 3,14,613 பயணிகள் பயணித்துள்ளனர். மேலும் இதுவரை 91,198 பயணிகள் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.