ஒரே கட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை நடத்த வேண்டுமென திமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கிவிட்ட நிலையில், அரசியல் கட்சிகளும் தங்களது பிரச்சாரங்களை ஆரம்பித்துவிட்டன. இதனிடையே தேர்தலுக்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே தேர்தலுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தமிழகத்திற்கு வந்து இறங்கிவிட்டன. மே மாதம் வாக்கில் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையர் தலைமையிலான குழுவினர் நேற்று சென்னை வந்தனர். சென்னை கிண்டியிலுள்ள ஐடிசி கிராண்ட் சோலா ஹோட்டலில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநிலக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, அரசியல் கட்சிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக வழங்கினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் ஆணையக் குழுவினரும் உறுதி அளித்துள்ளனர்.
ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், தமிழக சட்டமன்றத் தேர்தலை ஏப்ரல் மாதத்தின் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மே மாதம் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் முன்கூட்டியே நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
read more: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தோற்பார்: அதிமுக எம்.எல்.ஏ ஆருடம்!
திமுக சார்பில் 11 கோரிக்கைகள் அடங்கிய மனு தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறும்போது, ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம் என்றார். இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆலோசனைக்கு வந்த டி.ரங்கராஜனும், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.




