
ஆசிரியை திட்டியதால் மனமுடைந்த 11-ம் வகுப்பு மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. கட்டித் தொழில் செய்து வரும் இவருடைய மகன் ரிதுன் அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
வழக்கமாக பள்ளிக்கு வந்த ரிதுன் பாடத்தை ஒழுங்காக கவனிக்கவில்லை என்று கூறி ஆசிரியை ஒருவர் திட்டியுள்ளார். மேலும் வகுப்பறையை விட்டு ரிதுனை ஆசிரியை வெளியே நிற்கவைத்துள்ளார். இதனால் அவமானம் அடைந்ததாக எண்ணிய ரிதுன், பள்ளிக்கு அருகேவுள்ள தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
இதுதொடர்பான தகவல் போலீசாருக்கு கிடைத்தது. சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மாணவனின் இறப்புக்கு காரணமாக இருந்த ஆசிரியை காவல்துறை கைது செய்ய வேண்டும் என இறந்துபோன மாணவனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், உறவினர்கள் யாரும் போராட்டத்தை கைவிடவில்லை. மாணவனின் இறப்புக்கு காரணமான ஆசிரியை கைது செய்ய வேண்டும் என தொடர்ந்து அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக உள்ளது.




