
விசாரணைக்கு ஆஜராகமல் போனதால் கைது செய்யப்பட்ட மீரா மிதூனுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சமூகவலைதளங்களில் பட்டியலினத்தவர்களை அவதூறாக பேசியதாக நடிகை மீரா மிதூன் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு புகார் அளித்தார். இதையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் சென்னை சைபர் கிரைம் குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
இதையடுத்து தனது நண்பருடன் மீரா மிதூன் கேரளாவில் தலைமறைவானார். அங்குள்ள விடுதியில் அவர் தங்கிருந்த போது, போலீசாரை வளைத்துப் பிடித்து கைது செய்தனர். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் இவ்வழக்கு தொடர்பாக காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
அதையடுத்து நடைபெற்ற விசாரணைக்கு ஆஜராகுமாறு மீரா மிதூனுக்கு சம்மன் அனுப்பினார். ஆனால் அவர் கடந்த மார்ச் 25-ம் தேதி ஆஜராகவில்லை. நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததை அடுத்து, போலீசார் மீண்டும் மீரா மிதூனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை வரும் ஏப்ரல் 4-ம் தேதி வரை காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் தனக்கு பிணை வழங்கக் கோரி மீரா மிதூன் தரப்பின் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதுதொடர்பான மனுவை விசாரித்த சென்னை முதன்மை நீதிமன்றம் மீரா மிதுனுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை, வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.




