மனைவியின் தங்கையை மயக்க வசிய மருந்து ஊற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பூங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். அதே பகுதியை சேர்ந்த செவிலியரான தேன்மொழியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் திருமணத்திற்கு பிறகு கணவன்,மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 3 மாதத்திற்கு முன்பு கணவனை பிரிந்து செவிலியர் பணிக்காக தேன்மொழி வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில், மனைவியின் தங்கையான தமிழ்மொழி மீது திரவியத்தை ஊற்றியுள்ளார் ராஜேஷ். அவர் ஆசிட் ஊற்றிவிட்டார் என்ற பயத்தில் கத்தி கூச்சலிட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இது ஆசிட் இல்லை ஒரு விதமான எண்ணெய் திரவம் என்று கூறினர். பின் போலீசார் ராஜேஷை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். அதாவது, தனது மச்சினியை காதல் வலையில் வீழ்த்த வசியமருந்தை ஊற்றியதாக வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.




