கனடா நாட்டில் மார்கம் நகரில் உள்ள தெரு ஒன்றுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஆஸ்கர் நாயகன், கிராமிய நாயகன், உலகம் போற்றும் இசையரசன் என பல்வேறு பட்டங்களை வாங்கியுள்ள இசைபுயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு மற்றுமொரு மணிமகுடமாய் கனடா நாட்டில் மார்கம் நகரில் உள்ள ஒரு தெருவுக்கு ஏ.ஆர்.ரகுமான் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள் ஏ.ஆர்.ரகுமான் நன்றி வாழ்த்து ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
அதில், நான் எனது வாழ்வில் இது போன்ற ஒரு நிகழ்வை கனவில் கூட கண்டதில்லை. கனடா நாட்டின் மார்கம் மேயருக்கும், மக்களுக்கும் நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஏ.ஆர்.ரகுமான் என்னும் பெயர் எனக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அந்த பெயரின் முழு அர்த்தம், அமைதி, வளம் (செல்வாக்கு, செல்வம், உயர்நிலை), மகிழ்ச்சி. இது கனடாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் கிடைத்து மகிழ்ச்சியோடு வாழ இறைவன் அருள்புரிவானாக!
இந்த நேரத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு மிகப்பெரியது. புதுவிதமாக யோசிக்கும் அனைத்து மக்களுக்கும், என்னுடன் பணிபுரிந்த சக ஊழியர்களுக்கும், 100 வருட சினி உலகில் சினிமாவின் வளர்ச்சிக்கு பாடுபட்ட அனைத்து லெஜண்ட்களுக்கும் நன்றி. நான் மிகப்பெரும் கடலில் ஒரு சிறு துளி. இதன்மூலம் என் பணி இன்னும் அதிகமாகி இருக்கிறது. எனக்கு ஓய்வு என்பதே கிடையாது. என்னுடைய பொறுப்பு இன்னும் அதிகரித்திருக்கிறது. ஒருவேளை எனக்கு ஓய்வு தேவைப்பட்டாலும், நான் மக்களுக்கான சேவை செய்ய இது எனக்கு தூண்டுகோலாய் நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும். எல்லா புகழும் இறைவனுக்கே என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.




