கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தின் போது பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு பெரும் உதவிகளை செய்தது என வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: கொரோனா பெருந்தொற்று விரைவாக பரவிய காலக்கட்டத்தில் நட்பு ரீதியிலான அடிப்படையில், அண்டை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு வழங்கி பெரும் உதவிகளை செய்து இன்முகம் காட்டியது. வேற்றுமைகள் இருப்பினும் அவற்றை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும். இந்தியா மற்றும் வங்கதேசம் இரு நாடுகளும் அதை செய்தன. இரு நாடுகளுக்கும் இடையே நெருங்கிய ஒத்துழைப்பு காணப்படுகிறது.
ரஷ்யா & உக்ரைன் இடையேயான போரின்போது, வங்கதேச மாணவர்கள் பலர் சிக்கி தவித்தனர். பின்பு போலந்துக்கு வந்தனர். அவர்களை இந்திய மாணவர்களை மீட்டதுபோல் சொந்த நாட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தது இந்திய அரசு. இந்த தொடர் முயற்சிக்காக நான் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்.



