குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த பெண்ணை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாணவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
காரைக்கால் நேருநகரை சேர்ந்த ராஜேந்திரன்,மாலதி தம்பதியின் மகன் பாலமணிகண்டன் (13). இவர் அப்பகுதியில் உள்ள ‘சர்வைட்’ ஆங்கிலப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இவர், பள்ளியில் முதல் மாணவராக வந்தது பொறுக்காமல் அதே பள்ளியில் படிக்கும் சகமாணவியின் தாயார் சகாயராணி விக்டோரியா, குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து பாலமணிகண்டனை கொலை செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சகாயராணி விக்டோரியாவை கைது செய்த நிலையில், அரசு மருத்துவமனை நிர்வாகம் சரியான சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி போராட்டமும் நடந்தது. இதையடுத்து காரைக்கால் போராளிகள் குழுவினர் வரும் 10ம் தேதி கடையடைப்பு போராட்டம் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இறந்துபோன பாலமணிகண்டனின் பெற்றோர் தெரிவித்ததாவது: பாலமணிகண்டன் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்ததும் வாந்தி எடுத்தான். உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அவர்கள் எந்த பரிசோதனையும் செய்யாமல், வாந்தி நிற்பதற்கு மாத்திரைகளை கொடுத்து அனுப்பினர். மீண்டும் அவன் வாந்தி எடுத்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதித்தோம். மகன் வயிற்று வலியால் துடித்தும் அவர்கள் வெறும் குளுக்கோஸ் மட்டுமே செலுத்தினர். டாக்டர்கள் விரைந்து செயல்பட்டிருந்தால் எங்கள் மகனை நாங்கள் இழந்திருக்க மாட்டோம்.
அரசு மருத்துவர்கள் தங்கள் கிளினிக்கில் பணிபுரிவதால், உரிய சிகிச்சை அளிக்காமல் போய்விட்டனர். எனவே, அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக் நடத்த அரசு தடை விதிக்க வேண்டும். மேலும், விஷம் கொடுத்த சகாயராணி விக்டோரியா குண்டர் சட்டத்தில் வெளியே வரமுடியாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மகனை இழந்து வாடும் எங்களுக்கு புதுச்சேரி அரசு சார்பிலோ, பள்ளி நிர்வாகத்தின் சார்பிலோ இதுவரை ஆறுதல் கூறாதது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.