உண்மையை சொல்லவேண்டும் என்றால் பாலாவிற்கு சந்திரா மீது காதல் கடந்த காமமும், காமம் கடந்த காதலும் உண்டு. பாலாவிற்கு ஏற்கனவே திருமணமாகாவிட்டால் இதை வெறும் காதல் என்றே பழி சொல்லிவிடலாம். திருமண பந்தத்தில் நுழைந்து இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாகி விட்ட ஒருவருக்கு வரும் இதை வேறு என்னவென்று சொல்வது? இது நாற்பதை தொட்டு கடந்து விட்டவருக்கும், தொடப் போகிறவருக்கும் வரும் இயற்கையான தூண்டுதல். பாலாவுக்கு அப்படிப்பட்ட தூண்டுதல்.
பாலாவிற்கு சந்திரா மீது ஒரு ஈர்ப்பு இருப்பது போல, சந்திராவிற்கு பாலா மீதும் ஒரு ஈர்ப்பு இல்லாமலில்லை. பாலா தன் காதலை அழுத்தமாக புரியவைக்க சில மறைமுக உத்திகளை கையாண்டது போல சந்திராவால் வெளிக்காட்ட இயலவில்லை. சாலையில் நடந்து செல்லும் பெண் எதோ ஒரு ரசனையில் ஒருவனை பார்த்தால் கூட பற்பல அர்த்தங்களை கற்பிக்கும் சமூகத்தில் உடன் பணிபுரியும் அதுவும் தன் மீது ஈர்ப்பு கொண்டவன் என்பது தெரிந்தே காட்டும் சமிக்கை ஆபத்தானது என்பதை சந்திரா உணர்ந்தே இருக்கிறாள்.
பாலா மிகுந்த அழகுடையவன் என்று இல்லாவிட்டாலும் அந்த நாற்பதை நெருங்கும் ஆண்களின் வசீகரம் கொண்டவன். ஒருவனுக்கு திருமணமாகி பதினான்கு வருடங்களானால் அவனது குழந்தை குறைந்த பட்சம் ஏழாவது படித்தே ஆகவேண்டும் என்று பொதுப்புத்தி சமூகம் பாலாவுக்கும் உணர்த்தியுள்ளது. முதல் குழந்தை பெரும் நோக்கமும் ஆர்வமும் இரண்டாவது குழந்தையில் இருப்பதில்லை. இதன் காரணமாக இரண்டாவது குழந்தையும் பிறந்தது. மனைவி பிரியா மிகுந்த அழகுடையவள். பதினான்கு வருட வாழ்வு அவள் அழகை மறக்கடித்து சந்திராவை நாட வைத்திருக்கிறது.
சந்திரா முப்பதுடைய இல்லத்தரசி. தன்னுடைய அத்தை மகனையே திருமணம் செய்தவள். அவன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறான். திருமணமாகி எட்டு வருடங்களாகிவிட்டது. வருடத்திற்கு ஒருமாதம் வந்துபோகும் அவனால் வாழ்க்கை அடுத்த கட்டம் நோக்கி நகர முடியவில்லை. குழந்தை ஏற்படவில்லை. இன்னும் இரண்டு ஆண்டுக்குள் அவளை வெளிநாட்டிற்க்கு அழைத்து போவதாக சொல்லியிருக்கிறான். ஆகையால் இந்த இரண்டு ஆண்டுக்குள் பாலாவுக்கு இருக்கும் லட்சியம் என்னவென்று சொல்லி தெரியவேண்டியதில்லை.
முதலில் பாலாவும் சந்திராவும் நல்ல நண்பர்கள். மதிய சாப்பாட்டை பங்கு போடுமளவிற்கு. எந்த புள்ளியில் காதல் நுழைந்தது என்று இருவருக்குமே புரியாவிட்டாலும் புரிந்தே அனுமதித்ததன் பங்கு இருவருடையது. பொதுவாக கணவனை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு உள்ளூரில் வேலை செய்யும் பெண்களின் மீது ஆண் சமூகத்திற்கு ஒரு வரையறை இருக்கும். அந்த வரையறை தான் வெளிநாட்டிக்கு போனால் தான் மறையும். சந்திராவின் மீது ஈர்ப்பை உணர்ந்த பாலாவும் அதற்கு விதிவிலக்கல்ல. கூடுதலாக அவள் எதிர்ப்பே தெரிவித்தாலும் அது வெளியில் தெரியாத படி அவர்கள் நட்பு காப்பாற்றும் என்றும் நம்பினான். சந்திராவிற்கு பாலா மீதுள்ள ஈர்ப்பு ரகசியமாக இருக்கும்படி பார்த்துகொண்டாள். ரகசியம் காப்பது பெண்ணின் அகராதியில் கிடையாது என்பவர்கள் இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் அவர்களை புரிந்து கொள்ளப்போவதில்லை.
நாம் எதிர்பார்த்த தருணத்திற்காக காலமும் சூழலும் அமைந்தது போல தோன்றும். நாம் எதிர்பார்த்தது நடந்ததா இல்லையா என்பதை வைத்துதான் காலமும் சூழலும் அமைந்தது உண்மைதானா என்று விளங்கும். அன்று அலுவலகத்தில் பாலாவும் சந்திராவும் இரவு நேரத்தில் பணிபுரியவேண்டிய சூழல். சந்திராவின் துணைக்காக இன்னொரு பெண் பணியாளரும் இருந்தார்தான். ஆனால் அந்த பெண்ணின் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சந்திராவே அவளை அரைமனதோடு வீட்டுக்கு அனுப்பி வைத்தாள். இப்போது மாலை மறைந்து இரவு சூழல். அலுவலகத்தில் பாலாவும், சந்திராவும் மட்டுதான். வெளியே வாட்ச்மேன். இவர்களில் ஒருவர் கத்தாமல் அவன் உள்ளே வர வாய்ப்பில்லை. அலுவலகத்தில் தேய்ந்துபோன மின்விசிறி கிரீச்சிடும் சபதத்தை தவிர இருவரது கணிப்பொறியின் தட்டச்சு சப்தமும் இருந்தது.
பாலா வேலை செய்யும் இடத்திற்கும் சந்திரா வேலை செய்யும் இடத்திற்கும் கொஞ்சம் இடைவெளி இருந்தாலும் பாலாவின் இருக்கையில் இருந்து சந்திராவை எளிதாக கண்காணிக்கலாம். இந்த வசதியே அவள் மீது ஈர்ப்பு வர காரணமாக இருக்கலாம். வேலையில் கவனமாக இருந்தாலும் மூன்று நிமிடத்திற்கு ஒருமுறை பார்க்க தவறவில்லை. சந்திரா அவனை பார்க்காமலே பார்த்துக்கொண்டுதான் இருந்தாள். ஆண்களுக்கு கண்ணிருக்கும் இடத்தில் மட்டுமே கண்ணிருக்கும், பெண்ணுக்கு ஒரு ஆண் தன் மீது கண் வைக்கும் ஒவ்வொரு இடத்திலும் கண்ணிருக்கும்.
கிட்டத்தட்ட இருவரும் எண்பது சதவீத வேலையை முடித்துவிட்டார்கள். இப்போது மீதம் உள்ள இருபது சதவீத வேலையை இருவரும் சேர்ந்தே முடிக்க வேண்டும். ஒரே கணினியில் ஒருவர் பேப்பரில் உள்ள விஷயத்தை சொல்ல சொல்ல ஒருவர் கணினியில் சரிபார்க்க வேண்டும். பேப்பரோடு பாலா சந்திராவின் கணினி அல்லது சந்திராவுக்கு பக்கத்தில் வந்தான். கையில் இருக்கும் பேப்பர் காதல் கடிதமாக இருக்கக்கூடாது என்று வேண்டிக்கொண்டாள்.
அவள் அருகில் வந்து அமர்ந்து செய்ய வேண்டிய வேலையை விவாதித்தனர். சொல்லிவிட்டு சந்திராவை அழுத்தமாக பாரத்தான். சந்திரா அதை ரசிக்கவே செய்தாலும் வெளிகாட்டவில்லை. இவன் சொல்ல கணினி விசையில் தட்ட ஆரம்பித்தாள். தவறை திரையில் தொட்டு காண்பிக்கும் சாக்கில் அவன் உரச வருவதை லாவகமாக தவிர்த்தாள். இவள் தவிர்க்கும் போதெல்லாம் பாலா அதனை புரிந்தே வைத்திருந்தான். இரண்டு, மூன்று, நான்கு என்று அவன் உரசல் படலம் அதிகமானது. என்னதான் ஒரு காம விரும்பியாக இருந்தாலும் ஒரு அலுவலக நாகரீகம் கருதி அவன் உரசுவதை தவிர்த்திருக்க வேண்டும். ஆனால் மீண்டும் மீண்டும் அதை முயற்சித்து பார்ப்பதில் குறியாக இருந்தான். ஆளே இல்லாத அலுவலகம். ஆகவே இன்று எல்லாத்தையும் முயற்சித்து பார்க்க வேண்டும் என்ற முடிவிலே இருந்தான். உரசல் தொடர்ந்தது. வேண்டுமென்றே ஏசியை எண் பதினாறுக்கு கொண்டுவந்தான். குளிர் அவளை குதூகலப்படுத்தும் என்று நம்பினான். பதினாறுக்கு கீழ் இறங்காத ஏசியையும் உரசலை புரிந்து கொள்ளாத இவளையும் வைத்து என்ன செய்வது என்ற யோசனை அவனுக்கு. இந்த இரவு எனக்கானது இல்லையா என்று கவலை வேறு அவனுக்கு!
உரசலின் இடத்தை மாற்றி பாரத்தான். அவள் வேலையில் கவனமாக இருப்பது போல இருந்தாள். கணக்கு தொடர்பான ஒரு முக்கிய பைலை எடுத்து வருமாறு கூறினாள். அவன் எழுந்து சென்றதும் தன் சுவாசமும் சூடாவதை உணர்ந்தாள். பைலை கொண்டு வந்தவன் அதை அவளது மடியில் வைத்தான் கூடவே அவனது கையையும். உதறிவிட்டு எழவேண்டும் தான் அப்போது ஏனோ அவளுக்கு தோன்றவில்லை. இந்த ஒத்துழைப்பு அவனுக்கு முதற்கட்ட மகிழ்ச்சியை கொடுத்தது. பைலை அவன் எடுக்கவே இல்லை அவளும் எடுக்க சொல்லவில்லை.
இதுதான் சமயம் என்று கையை அவள் தொடை நோக்கி நகர்த்தி அவள் உணர்வுகளை சோதித்து பார்த்தான். ஒத்துழைப்பு என்று வந்துவிட்டால் ஒரு பெண்ணின் உணர்வின் வெளிப்பாடு எப்படி இருக்கும் என்பதை அவன் மனைவி மூலம் அறிந்த பாலாவிற்கு சந்திராவை அதனுடன் ஒப்பீட்டு பார்த்தான். எதோ கணக்குகளும் உணர்வுகளும் ஒரே அலைவரிசையில் செயல்பட தொடங்கியது. சற்று எழுந்து வந்த அவன் சந்திராவின் பின்கழுத்தில் ஒரு முத்தமிட்டான். இப்படி பின்கழுத்தில் முத்தமிடுவது பாலாவின் மனைவிக்கு பிடிக்கும். மனைவிக்கு பிடித்ததை செய்பவனே உண்மையான கணவன். அதை வேறு ஒரு பெண்ணுக்கு செய்கிறோம் என்கிற குற்றஉணர்வை கடந்து வந்து மூன்று நொடிகள் ஆகிவிட்டது. முத்தமிடும் போது அவள் கண் மூடி ரசிப்பதை முன்னால் இருக்கும் மானிட்டர் கண்ணாடி மூலம் அறிந்தான்.
இருவரும் வேறு ஒரு உலகத்திற்கு பயணிக்க தயாராகி இருந்தனர். “அவளுக்கு குழந்தை இல்லேன்னா என்ன? தத்தெடுத்து கூட வளப்போம். எக்காரணத்தை கொண்டும் சந்திராவை மட்டும் விட்டுகொடுக்க மாட்டேன்” சந்திராவின் கணவன் ரகு அவனது அம்மாவிடம் பேசிய வார்த்தைகள் வந்து பிரமையாக வந்து விழுந்தது. பாலாவை பிடித்து தள்ளிவிட்டு ஓடினாள் சந்திரா. அதிர்ச்சியான பாலா அவளை மீண்டும் நிர்பந்தப்படுத்த முற்பட்டான். அவள் கடுமையாக தடுத்தாள். மீண்டும் முயற்சிக்கவே அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். பாலா இயல்பான உலகத்துக்கு வர அதுவே போதுமானதாக இருந்தது. அவசரமாக அவளது ஹேன்ட்பேக்கை மாட்டிக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் அலுவலகத்தை விட்டு வெளியேறினாள்.
பாலாவின் அலைபேசி ஒலித்தது. அவனது மேலதிகாரி. வேலையே முடிச்சாச்சா? என்றார். அதிர்ச்சியை கட்டுபடுத்திக்கொண்டு பதில் சொன்னான், ஓரளவு முடிச்சாச்சி ஸார். மேலதிகாரி, இன்னும் கூட டைம் எடுத்துக்கங்க ஆனா சந்திராவை வீட்டுக்கு அனுப்பி வச்சிடுங்க. பாவம் லேடி. இந்த நேரத்துல தனியா போறது ரிஸ்க்” என்று சொல்லி போனை வைத்தார். மனதை ஒருநிலைப்படுத்தி வேலையை சீக்கிரமே முடிக்க வேண்டிய கட்டாயம் பாலாவுக்கு!
பிரியா தனக்காக காத்திருப்பாள் என்று அவனுக்கு தெரியும். வீட்டுக்கு போன் அடித்து இன்று இரவு வீட்டுக்கு வர மாட்டேன் என்று சொல்லிவிட்டான். வேலையை முடித்துவிட்டு நண்பன் அறைக்கு சென்று கொஞ்சம் மது அருந்தலாம் என்று திட்டம். சற்று நேரத்தில் வேலை முடிந்தது. மேலதிகாரிக்கு செய்த வேலையை மெயில் செய்துவிட்டு அலுவலகத்தை இருந்து வெளியேறினான். தான் செய்தது ஆகப்பெரிய அயோக்கியத்தனம் என்றாலும் பள்ளி மாணவனின் காதல் தோல்வி போல இரண்டு சோகப்பாடலை போனில் போட்டு ஹெட்போனை காதில் மாட்டிக்கொண்டான். வண்டியை உதைத்து நண்பனின் அறை நோக்கி போனான். வழியில் வீரம்செறிந்த அர்த்தம் கொண்ட ஒரு ஆங்கில பானத்தை வாங்கி பையில் போட்டுக்கொண்டான். அவனது பைக் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் நண்பனின் அறை வாசலில் நின்றது. வழியெங்கும் சந்திராவின் நினைவுகள். கண்ணீர் கூட வந்தது. கவனமாக துடைத்துக்கொண்டு விரைந்தான்.
நண்பனது அறை பூட்டிக்கிடந்தது. அப்போதுதான் நண்பன் ஊருக்கு செல்வதாக கூறியது நினைவுக்கு வந்தது. இது இன்றைய இரண்டாவது தோல்வி. உலகமே அவனை காறி துப்புவது போல இருந்தது. உண்மையில் அது லேசான தூறல். வீட்டுக்கு போவதாய் முடிவு செய்தான். வாங்கிய மது குப்பிகளை பார்த்து பெருமூச்சுடன் அதனை பையில் திணித்தான். மனைவி பிரியாவுக்கு போன் அடித்து வீட்டுக்கு வருகிறேன் என்று சொல்லலாம் தான். ஆனால் பாவம் தூங்கியிருப்பாள். மனைவிக்கு உண்மையாக இல்லையே என்று முதன்முறையாக வருந்தினான். மனைவிக்கு பிடித்த இனிப்பு வகையை வாங்கிவிட்டு வீடு நோக்கி சென்றான்.
வரும் வழியில் நாளை சந்திராவை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற கவலை வேறு புதிதாக சேர்ந்திருந்தது. வீட்டுக்கு வந்துவிட்டான். கதவு உள்பக்கம் பூட்டியிருந்தது. இவனிடம் உள்ள சாவியை வைத்து உள்ளே வந்தான். பையில் இருக்கும் மது அவனை விடுவதாக இல்லை. ஊற்றி குடிக்க கிளாஸை எடுப்பதற்கு ஷூவை கழற்றி வைத்துவிட்டு சமையலறை நோக்கி நடந்தான். சமையலறையில் மெல்லிய வெளிச்சத்தில் மனைவி பிரியா அரை நிர்வாணத்தில் வேறொரு ஆணுடன் வேறொரு வேலையில் இருந்தாள்.
இந்த காட்சியை பார்த்த பாலாவுக்கு அந்த இருட்டு இன்னும் இருட்டியது. ஒரு ஆறு மணி நேரத்தில் எத்தனை சம்பவங்கள்? நெஞ்சு வலிப்பது போல இருந்தது. கத்தியை எடுத்துக்கொண்டு பிரியா, ஆகாஷ், சந்திரா ஆகிய மூவரையும் கொன்றுவிட்டால் என்ன என்று தோன்றியது. பாவம் சந்திரா என்ன தவறு செய்தாள்? என்ற எண்ணம் வேறு. திரும்பி நடந்தான். அறையில் அவனது குழந்தைகள் சலனமில்லாமல் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தார்கள். குழந்தைகளை பார்த்ததும் கண்ணீர் கால் பெருவிரலலை நனைத்தது. பூட்டை பழைய நிலையில் இருந்தது போல பூட்டிவிட்டு வண்டியை உருட்டிக்கொண்டு தெரு முக்கில் ஸ்டார்ட் செய்து இலக்கு தெரியாமல் சென்று கொண்டிருந்தான்.
உலகம் மிகக்கேவலமானது, அருவெறுப்பானது, நன்றி உணர்வு இல்லாதது என்று முனகிக்கொண்டே வந்தான். அதை சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கிறது? சந்திரா சம்மதித்து இருந்தால் ஆகாஷ் நீயாகி இருப்பாய் மனைவி சந்திராவாகி இருப்பாள். காதலுக்கு பல நோக்கம். காமத்துக்கு ஒரே நோக்கம் கழுத்தை கட்டிக்கொண்ட ஒரு சாத்தான் சொல்வது போல இருந்தது.
பைக்கை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு மதுவை நீர் கலக்காமல் அப்படியே உள்ளே இறக்கினான். நெஞ்சு எரிந்தது. அதை விட உள்ளே எரிந்தது. ஒரு நாய் அவனை பார்த்தது. அடியே பிரியா உனக்கு என்னடி குறை வச்சேன்? கேவலம் ஒரு செக்ஸுக்கு போய்….போடி! என்று அழுதான். வண்டியை ஓரமாக வைத்துவிட்டு சிகரெட்டை இழுத்தான். நெஞ்சில் அழுத்தியிருந்த பாரம் கொஞ்சம் குறைந்தது போல இருந்தது.
வண்டியை நேராக சந்திரா இல்லம் நோக்கி போனான். வீட்டில் அவளின் வயதான தாயை தவிர யாருமில்லை. வீட்டுக்கு சென்று அவளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு முடிந்தால் அவள் செருப்பை கொண்டு அவள் கையால் அடிக்க சொல்வது அவள் மறுத்தால் தானே அடித்துக்கொள்வது என்கிற தீர்மானம். காரணம் தன் மனைவியை குற்றம் சொல்ல தனக்கு தார்மீக உரிமை இல்லை எனவும் சந்திரா தன்னை மன்னித்துவிட்டால் இழந்த உரிமையை மீட்டி விடலாம் என்று நம்பினான். அவள் வீடு நோக்கி பறந்தான். வழியெங்கும் வீடுகள் உள்ளே அவரவர் மனைவி அவரவர் கணவனிடம் தான் உறங்குகிறார்களா என்று சந்தேகம் கொண்டான். மது அப்படி சிந்திக்க சொன்னது.
சந்திரா வீட்டை அடைந்ததும் மணி பதினொன்று. வீட்டு வாசலுக்கு சற்று தள்ளி நிறுத்திவிட்டு அவளுக்கு போன் செய்தான். எடுக்கவில்லை. மீண்டும் அடித்தான் கட் செய்தாள். உன்னிடம் மன்னிப்பு கேட்க வெளியே நிற்பதாகவும், சந்திக்க மறுத்தால் சாவதை தவிர வேறு வழியில்லை என மெசேஜ் தட்டிவிட்டான். இரண்டாவது நிமிடத்தில் அவள் வீட்டில் விளக்கு எரிந்தது. கேட்டை திறந்து வெளியே வந்தாள், நைட்டியில் தேவதை போல மிளிர்ந்தாள். தா@$ளி நீ இன்னும் திருந்தலயா? என்று அவன் கன்னத்தை அவனே அறைந்து கொண்டான். ஓடிச்சென்று அவள் காலில் விழுந்தான். அவள் தடுத்தும் இவன் எழவில்லை. என் மேலையும் கொஞ்சம் தப்பு இருக்கு பாலா என்று சமாதானம் சொல்லியும் அவன் எழுவதாக இல்லை. நேரம் செல்ல செல்ல பெரும்குரலெடுத்து அழ தொடங்கவே அவனை வீட்டுக்குள் உள்ளே அழைத்து சென்றாள்.
குடிச்சிருக்கியா பாலா?
ஆமா குடிச்சிருக்கேன். எதுக்குன்னு கேளு!
ஏன்?
பொண்டாட்டி பிரியா இருக்காளே….
என்ன சொல்ற பாலா? பிரியாவா இப்படி? நம்பவே முடியல!
நான் மட்டும் நல்லவனா சந்திரா? என்னைய மன்னிச்சிரு. நீ என்னய மன்னிச்சாலும் மன்னிக்காவிட்டாலும் செத்துதான் போவேன்.
அவனை ஆழமாக பார்த்த சந்திரா, சரி வா என்று அவளது அறைக்கு அழைத்து சென்று ஆசை தீர மன்னித்தாள். இம்முறை பாலா மறுத்தும் அவள் விடுவதாக இல்லை.
களைத்து போட்ட உடைகளை இருவரும் அணிந்து கொண்டனர். இனி யாரும் யாரையும் மன்னிக்க வேண்டாம் என்று சொல்லி அவன் நெற்றியில் ஒரு முத்தமிட்டாள்!
வெளியே வந்த பாலாவிற்கு எதுவும் பிடிபடவில்லை. மனித உணர்வுகள் விசித்திரமானவை. எண்ணங்கள் துரோகத்துக்கு பழக்கப்படாதவை. இன்று நடந்த சம்பவங்கள் யாவும் தர்மத்துக்கு எதிரானவை. துளியும் நேர்மை இல்லாதவை. எனிலும் பாலாவின் மனம் கொஞ்சம் லேசானது போல இருந்தது. துரோகத்திற்கு இன்னொரு துரோகம் சரியானது இல்லை தான். இது நிரந்தர தீர்வை நோக்கி நகராது தான். ஆனால் ஒரு தற்காலிக தீர்வை தந்துள்ளது. ஒரு போதை தரும் அதே தற்காலிக உணர்வை தான் இதுவும் கொடுத்துள்ளது.
பாலா வீட்டிற்கு வந்தான். மனைவி ஆசையோடு வரவேற்றாள். இவளா சமயலறையை வேறு விதமாக பயன்படுத்தியது? என்ன ப்ரியா காலைலயே தலைக்கு குளிச்சிட்டு? சின்னவன் நைட்டு என் மேலதான் படுத்திருந்தான். நானும் அப்படியே அசந்துட்டேன். கொஞ்ச நேரத்துல என் மேலே உச்சா போய்ட்டான். அதான் சீக்கிரமே எந்திரிச்சு குளிச்சுட்டேன் என்றபடி அவனிடமிருந்து பையை வாங்கினாள். இவனும் தலைக்கு குளித்தான்.
காலை டிபன் வந்தது. வாட்சப்பில் சந்திரா ஒரு ஹார்டின் அனுப்பி வைத்திருந்தாள். பதிலேதும் அனுப்பாமல் போனையே பார்த்துக்கொண்டிருந்தான். டிவியில் எதோ சீரியல் ஓடிக்கொண்டிருந்தது. அதில் ஒரு மாமியார் உங்களுக்கெல்லாம் வெட்கமா இல்லையா? என்று யாரையோ பார்த்துக்கேட்டாள். எதுக்கு வெட்கப்படணும்? என டிவி பெண்ணை பார்த்து பதிலுக்கு கேட்டான் பாலா. சமையலறையில் மனைவி பிரியா , என்னங்க இன்னொரு தோசை ஊத்தவா? என்றாள்
***********************