மாமனாருக்கு காஃபி எடுத்துக் கொண்டு போகும் போது பால்கனியில் அழுகை சத்தம் கேட்டது. தன் மாமனார் குலுங்கி குலுங்கி அழுவதை பார்த்ததும் மனதை பிசைந்தது சுதாவுக்கு.
மாமியார் இறந்து மூன்று மாதங்கள் ஆகிறது… எதை பார்த்தாலும் அவருக்கு மாமியார் நினைவுதான். மாமியார் அவருக்கு தேவையானதை வேளா வேளைக்கு பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தார். அவர் திடீரென மறைந்து போனது மாமனாருக்கு கை ஒடிந்தது போல் இருந்தது.
கணவர் இறந்தால் துக்கத்திலிருந்து சட்டென்று விடுபட்டு அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்றும் மகன் அல்லது மகள் குடும்பத்துடன் வாழ பழகிக் கொண்டோ, தனியாக இருக்கவும் தங்களை தயார் படுத்திக் கொள்ளும் தைரியம் கொண்டவர்கள் பெண்கள்.
ஆனால் ஆண்கள் தங்களது மனைவியை இழந்தால் சட்டென்று மனம் ஒடிந்து ஒருவித துக்க நிலைக்கு செல்கிறார்கள். பெரும்பாலும் மனைவியை சார்ந்துதான் கணவர்கள் இருப்பதே இதற்குக் காரணம் என்று நினைத்துக் கொண்டாள் சுதா.
பரபரவென்று சமையலை முடித்து கணவருக்கும் மகளுக்கும் பரிமாறி கையில் வேறு கட்டிக் கொடுத்து அனுப்பிவிட்டு அவசர அவசரமாக செய்தவற்றை முழுங்கி விட்டு அலுவலகம் செல்ல புறப்பட்டாள்.
மாமா உங்களுக்கு தேவையானதை டைனிங் டேபிள் மேல் வைத்திருக்கிறேன்..எடுத்து போட்டு சாப்பிடுங்கள் என்று புறப்பட்டாள் சுதா.. மாமனாரின் முகம் வாடியது போல் உணர்ந்தாள். மாமியார் இருந்த வரைக்கும் சூடாக பரிமாறுவார்…சூடாக சாப்பிட்டாலே ருசி தனிதான்…அது இப்போது முடியாதே என்று நினைத்து அலுவலகம் சென்றடைந்தாள்.
அலுவலகத்தில் வேலை ஓடவில்லை. மாமனாரின் அழுத முகமே நினைவுக்கு வந்து வேதனை கொள்ளச் செய்தது. கணவர் மிக நல்ல வேலையில் இருக்கிறார். நிறைய சம்பாதிக்கிறார். அவருடைய சம்பளம் மட்டுமே குடும்பம் நடத்த போதுமானது. ஏன் வேலையை நாம் விடக் கூடாது? எதற்காக இப்படி அவசரம் அவசரமாக எல்லாம் செய்து அலுவலகம் வர வேண்டும்? வேலையை விட்டால் மாமனாரை நன்றாக பார்த்துக் கொண்டு, தனிமையில் திருச்சியில் இருக்கும் தன் அப்பாவையும் கூட்டிக் கொண்டு வரலாம்.. அண்ணா USA வில் இருப்பதால் அப்பா தனியாக இருக்கிறார். US சென்றாலும் அண்ணா மன்னி இரண்டு பேரும் வேலைக்கு செல்வதால் அவர்களாலும் பார்த்துக் கொள்ள முடியவில்லை. அப்பாவுக்கும் அங்கே போய் இருக்க விருப்பமில்லை.
தங்களுடைய வீடு மூன்று அறைகள் கொண்டது. ஆதலால் பிரச்சினை ஒன்றும் இல்லை. தான் வீட்டில் இருந்தால் மகளுக்கும் சந்தோஷம். வேலையை விடுவதே சரி என்று முடிவெடுத்து தன் கணவருக்கு தெரியப்படுத்தினாள். கணவரும் சம்மதம் தரவே உடனடியாக வேலையை ரிசைன் செய்வதாக எழுதிக் கொடுத்தாள்.
நோட்டீஸ் பீரியட் முடிந்து வேலையை விட்டு வரும் போது ஒரு வித சந்தோஷ மனநிலையில் இருந்தாள்.
மாமனாரை பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டாள். தினமும் மாலை வேளையில் அவரை அழைத்துக் கொண்டு அருகில் இருக்கும் பூங்காவில் நடை பயிற்சி செய்ய சொன்னாள். அவருக்கும் பூங்காவில் தன் வயது ஒத்த நண்பர்கள் கிடைத்தனர்.
மாமானார் மிக விரைவில் துக்கத்திலிருந்து விடுபட்டு சந்தோஷ மன நிலைக்கு வருவதைக் கண்டதும் மகிழ்ச்சி கொண்டாள்.
குடும்பம் இயல்பு நிலைக்கு திரும்பியது. காலையில் மாமனாருக்கு காஃபி எடுத்துக் கொண்டு போகும் போது அவர் தன் பெண்ணுடன் ஃபோனில் பேசுவதைக் கேட்டு திரும்ப நினைக்கும் போது அவர் சத்தமாக “என்னை நல்லாதான் பாத்துக்கிறா..வாய்க்கு ருசியா சமைச்சு போடறா.. ஆனா எல்லாம் வேஷம்..அவளோட அப்பாவை இங்கே கூட்டிக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக எனக்கு உபசாரம் நடக்கிறது” என்று அவர் பேசுவதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தாள். “
“நாம் எதையும் எதிர்பார்த்து செய்யவில்லை..வயசானவர்…
ஏதாவது சொல்லிக் கொள்ளட்டும் ” என்று நினைத்து அடுத்த வேலையை பார்க்க உள்ளே சென்றாள் சுதா.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxc