“கல்யாணி, இன்னும் என்ன தூக்கம் வேண்டியிருக்கு? நேரமாயிடுச்சு எழுந்துடு” எனக் கனத்த குரலில் படுக்கறையின் கதவைத் தட்டினாள் குப்பம்மா.
கதவு தட்டும் சத்தத்தினால் கண் விழித்த கல்யாணி கடிகாரத்தைப் பார்த்து “விடியற்காலை நான்கு மணி தானே ஆகுது. இன்று எந்த பண்டிகையும் இல்லையே! எல்லா வேலையையும் முடிக்க இரவு பத்து மணி ஆகிடுது. அப்புறம் குழந்தைகளைத் தூங்க வைக்கறதுக்குள்ள பதினொன்று ஆகிடுது. அதற்குள் ஏன் எழுப்பினார்கள்?” என தன் மனதிற்குள் புலம்பியவாறே தூக்க கலக்கத்தோடு குளியலறைக்குச் சென்றாள்.
அங்கே, ஒரு மூட்டை துணி அவள் வருகைக்காகக் காத்திருந்தது. அத்துணிகளைத் துவைத்த பின் பரபரப்புடன் குளித்து முடித்த கல்யாணி யாருடைய தூக்கமும் கெடாதவாறு அமைதியாக நடந்து சென்று தெரு வாசற்படியை நன்றாக தூய்மை செய்து அழகிய வண்ணக் கோலமிட்டாள். பிறகு, வீட்டினுள் அவள் அதிக நேரம் புழங்கக்கூடிய சமையலறையினுள் சென்றவுடன் இருண்டு இருந்த அந்த அறை வெளிச்சம் பெற்றது.
பிள்ளைகள் தூக்கத்திலிருந்து எழுவதற்குள் விறுவிறுவென்று வேலைகளைச் செய்து முடிக்க முடியாமல் தன்னுடைய மாமியார் குப்பம்மாவின் கட்டளைக்காகக் காத்துக் கொண்டிருந்தாள்.
ஒரு வழியாக சமயலறைக்கு வந்த குப்பம்மா எப்பொழுதும் போன்று செய்ய வேண்டிய உணவு வகைகளைக் கூறிவிட்டு அதற்குண்டான காய்கறி, மளிகைப் பொருட்களை அளவாக எடுத்துக் கொடுத்து ருசியாக சமைக்கச் சொன்னவள். “மாப்பிள்ளை வீட்ல இருக்காரு அவருக்கு தனியாக உணவு செய்திடு” என்றும் கூறினாள்.
“எல்லாப் பொருட்களும் குறைவாக உள்ளது. ஆனால், உணவு ருசியாக இருக்க வேண்டும். அப்படி, ருசியாக இல்லையென்றால் சமைக்கத் தெரியவில்லையென்று எல்லோர் முன்னாடியும் அசிங்கப்படுத்துவாங்க. எப்படி தான் சமாளிப்பது?” என்று புலம்பிக்கொண்டே சமையலைத் தொடங்கினாள் கல்யாணி. அதற்குள், பிள்ளைகள் அழும் குரல் கேட்க வேகவேகமாக ஓடி பாலைக் கலக்கி பிள்ளைகளுக்குக் கொடுத்தப்பின் அவர்களை மீண்டும் தூங்க வைத்தவள் மறுபடியும் அவள் வாசம் செய்யும் சமயலறைக்குச் சென்று வேலையைத் தொடங்கினாள்.
காலை உணவைச் செய்து முடிப்பதற்குள் ஒவ்வொருவராகப் படுக்கறையைவிட்டு வெளியே வந்தனர். உடனே, அவரவர்களுக்குத் தேவையான தேநீர் கலக்கி கொடுத்த கல்யாணி, பிள்ளைகளை எழுப்பி பல்துலக்கச் செய்து, குளிப்பாட்டி அவர்களையும் தயார்ப்படுத்தினாள்.
ஒரு வழியாக பத்து மணிக்கு அனைவரும் காலை உணவு உண்ண வந்தனர். சிற்றுண்டி ’பூரி’ என்றதும் அனைவரும் மகிழ்ச்சியோடு போட்டிபோட்டுக் கொண்டு தொலைக்காட்சியைப் பார்த்தபடியே ரசித்துச் சாப்பிட்டனர். அதன் பிறகு, மிச்ச மீதியை எடுத்துக் கொண்டு சமயலறைக்குப் புறப்பட்ட கல்யாணி “அப்பாடா! எப்படியோ காலை உணவு முடிந்தது” என்று களைப்பாரிக் கொண்டே பதினொரு மணிக்கு சமயலறையின் புழுக்கத்தில் உண்ணத் தயாரானாள். பூரிக்கு தொட்டுக் கொள்வதற்கு உருளைக்கிழங்கு மசாலா தீர்ந்து விட்டதைக் கண்ட கல்யாணி அனைவரும் உணவை ரசித்து சாப்பிட்டுள்ளனர் என்னும் மனமகிழ்ச்சியுடன் புன்னகைத்துக் கொண்டே என்றைக்கும் போல் பாத்திரத்தைத் துடைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
திடிரென்று அம்மா…. என்ற குரல் கேட்க சாப்பிடுவதை பாதியிலே நிறுத்திவிட்டு ஓடிய கல்யாணி சண்டையிட்டுக் கொண்டிருந்த பிள்ளைகளைச் சமாதானப்படுத்தியப் பிறகு பிற்பகல் சமையலைத் தொடங்கினாள்.
இவ்வாறு பிற்பகல் சமையலுக்குப் பிறகு மாலையில் அனைவருக்கும் தேநீர் வைத்துக் கொடுப்பது, துணியை மடித்து வைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, பாத்திரங்களைத் தூய்மைப் படுத்துவது, சமையல் செய்வது என வீட்டு வேலைகள் ஒருபுறம் இருக்க பிள்ளைகளையும், வீட்டில் உள்ளவர்களையும் கவனிப்பதைச் சரிவர செய்து வந்தாள்.
ஒரு நாள் திருமணப் பத்திரிக்கை வைப்பதற்காக வீட்டிற்கு வந்த தோழி பாரதியை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்று புன்முறுவலுடன் உபசரித்த கல்யாணி வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று நீண்ட நாள் நட்பின் கதைகளைப் பாரதியுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
“வீட்டில் இவ்வளவு வேலைகளையும், அனைவருக்கும் தேவையானவற்றையும் சரிவரச் செய்து கொண்டு, வேலைக்கும் போயிட்டு வரியே, எப்படி உன்னால மட்டும் முடியுது? ஆனால், வீட்டில் உள்ளவர்கள் உனக்கு மதிப்பு கொடுக்கற மாதிரியே தெரியலையே, ஏண்டி? இப்படித்தான் இருப்பார்களா? நீ செய்யறது கொஞ்சம் கூட சரியில்லை, உன்னை சண்டை போடவோ, பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கக் கூடாது என்றோ சொல்லவில்லை, நீயும் அந்த வீட்டில் எல்லோர் போன்றும் ஒரு மனுஷி எனப் புரியவை. உன்னுடைய நியாயத்தை தைரியமாக எடுத்துச் சொல், தவறு நடந்தா உன்னுடைய சரியான கோபத்தைக் காட்டு, அநீதிகளை எடுத்துக் கூறுவது ஒன்றும் தவறே இல்லை. தவறு என்று தெரிந்தும் அதனை பொருட்படுத்தாமல் இருப்பது மிகப்பெரிய குற்றம், கல்யாணி. கோபப்பட வேண்டிய இடத்தில் கோபப்பட்டால் தான் உண்மை என்னவென்று புரியும் உனக்கும் மரியாதை கிடைக்கும்; மருமகன் மனம் நோகாமல் பேசவேண்டும், அவரை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் தன்னுடைய மகள் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பாள் என நினைக்கும் உன்னுடைய மாமியார். மருமகளிடம் அன்பாகப் பழகினாள் தன்னுடைய மகன் மகிழ்ச்சியாகவும், நலமாகவும் இருப்பான் என்று ஏன் நினைக்க மாட்டறாங்க” என்று அடுக்கடுக்கான கேள்விகளைக் கல்யாணியிடம் முன்வைத்தாள் அவளின் தோழி பாரதி.
“சமூகம் எவ்வளோ மாறிவிட்டது. ஆண்களுக்கு பெண்கள் சமம், பெண்கள் அனைத்துத் துறைகளிலும் தடம் பதித்து விட்டார்கள் என்று பேசுகிறார்களே தவிர அது நடைமுறையில் உள்ளதா? என்பது தான் சந்தேகம்; சொல்லப்போனால் அவளவள் வீட்டிலே பெண்களுக்கு பேச்சுரிமையும் அவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவமும் உள்ளதா? என்று அவரவர்களே வினா எழுப்பிக் கொள்ள வேண்டும்” என்று பாரதியின் கேள்விகளுக்கு கல்யாணி வருத்தத்துடன் பதில் தெரிவித்தாள் .
“சரி கல்யாணி எனக்கு நேரமாயிடுச்சு உன்னிடம் பேசிக்கிட்டு இருந்தால் நேரம் போகறதே தெரியல, சொன்னது புரிந்து இருக்கும் என நினைக்கிறேன்” என பாரதி நாசுக்காகக் கூற, சற்று சிந்தித்தப்படி வீட்டின் மொட்டை மாடியிலிருந்து கீழே இறங்கிய கல்யாணி “திருமணப் புதுப் பெண்ணா வலம் வருவதை விட புதுமைப் பெண்ணாக இருப்பது தான் உனக்கும், உன்னைச் சுற்றியுள்ளவருக்கும் நன்மைப் பயக்கும்” என அறிவுறுத்த உறுதிகொண்ட நெஞ்சினால் புது உலகைப் படைக்கப் புறப்பட்டாள் கல்யாணியின் தோழி பாரதி.