சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அந்த போராட்டம் தீவிர மடைந்திருந்தது. சுதந்திரப் போராட்டத்தைப் போன்றே இது சுதந்திரத்தை அடைவதற்கான போராட்டமாக இருந்தது. இங்கே போராடிக் கொண்டிருப்பவர்கள் அரசியல்வாதிகளோ, பணக்காரர்களோ அல்ல தினமும் உழைக்கும் அன்றாடங்காய்ச்சிகள். அடுத்த தலைமுறையை வாழவைக்கும் நோக்கத்தில் சிறுவர்களும் முதியவர்களும் பெண்களும் ஒன்று கூடி தொண்டை வறண்டு போகும் அளவிற்கு எழுப்பிய கோஷம் அந்தத் தெருவையே அதிர வைத்தது.
‘ஆளைக் கொல்லும் ஆலையை மூடு’
‘நன்செய் பூமியில் நஞ்சை விதைக்காதே’
கோஷங்களுக்கிடையே ஒரு பெண்ணின் அலறல் சத்தம் தனித்து கேட்டது.
“அம்மா வயிறு வலி தாங்க முடியலியே,”
அவள் நிறைமாத கர்ப்பிணி என்பதை அவளது வயிறு உணர்த்தியது.
“ஏம்மா நீ எல்லாம் போராட்டத்துக்கு வர்றே” பக்கத்தில் இருந்தமுதியவர் அக்கறையோடு கேட்டார்.
“நான் போராடுவது எனக்காக மட்டும்இல்லீங்க ஐயா… என் வயத்துல இருக்கிற குழந்தைக்கும் சேத்து தான்… போராடுவோம் போராடுவோம்… சாகும் வரை… “
வார்த்தையை முடிக்காமல் சுருண்டு விழுந்தாள் அந்தப்பெண்மணி அனைவரும் அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்தனர் அவளது வயிற்றில் குண்டு பாய்ந்து ரத்தம் பீய்ச்சியடித்துக் கொண்டிருந்தது… வயிற்றைத் தாங்கிப் பிடித்தபடி அந்த இளம் தாயின் உயிர் துடித்து அடங்கிபோனது.
“அடிப்பாவி மகளே வரவேண்டாம் வரவேண்டாம்னு தலையில அடிச்சிகிட்டேன். பத்து வருஷமா குழந்தை இல்லாம தவம் இருந்தியே இதுக்குத்தானா… “
அந்த நடுத்தர வயதுப் பெண்மணி மார்பிலும், தலையிலும் மாறி மாறி அடித்தபடி அலறிக் கொண்டிருந்தாள்.
*****
காக்கி யூனிபார்முடன்வீட்டிற்குள் நுழைந்த இன்ஸ்பெக்டர் விமல் ராஜ், லுங்கி, பனியனுக்கு மாறினான்.
“என்னங்க ஒரு தடவ கூடபோன்காலை அட்டென் பண்ண மாட்டீங்களா?” கோபத்துடன் ஆஜரானாள் அட்சயா.
“என்னடி பண்ணச் சொல்ற என் வேலை அப்படி தெரியாதா உனக்கு பஸ்ட் நைட்டை அட்டன் பண்ற டைம்ல கூட டூட்டிக்கு போன கடமை வீரன் நான்.”
சிரித்தபடி சொன்னான் விமல்ராஜ். அட்சயா தன் முகத்தில் வெட்கத்தை அப்பிக் கொண்டாள்
“சரிங்க கை காலை கழுவிட்டு வாங்க சாப்பிடலாம்”
“மொதல்ல குளிக்கணும் ரயில்வே ரோட்ல துண்டாகிப் போன டெட்பாடியோட ரெண்டு மணி நேரமா இருந்துட்டு வர்றேன்… சரி எதுக்காக போன் பண்ணினே”
அட்சயாவின் முகத்தை கவனித்தான் விமல்ராஜ் அவளது விழிகளில் ஆனந்தம் வழிந்துகொண்டிருந்தது.
“கல்யாணமாகி ஆறு வருஷத்துக்கு பிறகு நீங்க அப்பா வாக போறீங்க… நான் அம்மா ஆகப்போறேன்”
தன் அழகான மனைவியின் நெற்றியில் முத்தமிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான் விமலராஜ்…
“சரி அம்மாவுக்கு எப்படி இருக்கு”
“அம்மாவுக்கு அப்படியே தாங்க இருக்கு இன்னைக்கு வழக்கத்தை விட மூச்சுத் திணறல்அதிகமா இருக்கு”
“சரி ரெண்டு பேருமே புறப்படுங்க ஆஸ்பிட்டல் போகலாம்”
*****
டாக்டரின் பதிலுக்காக காத்திருந்தான் விமல்ராஜ்… “டாக்டர்…அம்மாவோட நிலைமை எப்படியிருக்கு “
“இந்த ஏரியாவுல இருக்கிற எல்லோருக்கும் உள்ள பிரச்சினைதான் உங்க அம்மாவுக்கும்…அந்த ஆலை இந்த ஏரியாவுக்கு வந்ததிலேர்ந்து நிறைய பேர் பாதிக்கப் பட்டிருக்காங்க சொல்லவே வெட்கமாயிருக்கு எனக்கும் அந்த பாதிப்பு இருக்குஆலையிலேர்ந்து வெளியாகும் நச்சுப் புகை பீடி, சிகரெட் பிடிக்கிறவங்களை விட பல மடங்கு பாதிப்பை ஏற்படுத்துது”
“இதுக்கு என்னதான் தீர்வு டாக்டர்”
“சில பேர் போராடிப் பாக்குறாங்க சில பேர் ஊரைக்காலி பண்ணிட்டு போனாங்க நானும் வேற ஊர்க்கு போலாம்னா முடியல. ஏன்னா இந்த ஊர்லதான் வருமானம் அதிகமா கிடைக்குது… “
இருமிக்கொண்டே சிரித்தார் டாக்டர் பரசுராமன்.
*****
தன் கணவனின் முகத்தில் வழக்கத்தை விட கூடுதல் மகிழ்ச்சி தென் படுவதை கவனித்தாள் அட்சயா…
“என்ன இன்னைக்கு சார் செம மூடுல இருக்கார் போலிருக்கு… “
“ஆமாம் அட்சயா எனக்கு வேற ஊர்க்கு டிரான்ஸ்பர் கிடைச்சிருக்கு நாம போற இடம் இயற்கை வளம் கொட்டிக் கிடக்கிற வளமான பூமி… மூணு வருஷத்துக்கு பிறகு சுத்தமான காத்தை சுவாசிக்கப் போறோம்.”
“இந்த ஊர்க்காரர்களை நினைச்சாதாங்க எனக்கு கலலையா இருக்கு… எத்தனை நாளைக்குதான் இப்படி போராடிட்டே இருக்கப் போறாங்க… பாவம்ங்க… அந்த அப்பாவி சனங்க… “
மகிழ்ச்சியிலிருந்து வருத்தத்திற்கு மாறினாள் அட்சயா.
“அது அவங்க தலை எழுத்து… நமக்கு அதிர்ஷ்டம் இருக்கு…அம்மாவுக்கு குணம் ஆகணும் நமக்கு பிறக்கப் போற குழந்தைக்கும் எந்த பாதிப்பும் வரக்கூடாது… சரிஅம்மா எப்படி இருக்காங்க. “
“அவங்களுக்குஅப்படியேதான் இருக்கு டிரீட்மெண்ட் செட் ஆகல… “
*****
தன் மனைவியை அழைத்துக் கொண்டு அம்மா இருக்கும் அறைக்கு சென்றான் விமல்ராஜ்… அவர்களை பார்த்த சிவகாமி… எழுவதற்கு முயற்சி செய்து மீண்டும் படுத்துக் கொண்டாள்.
“அம்மா நாம வேற ஊர்க்குபோறோம் இனி நீ குணமாயிடுவ”
“என்னமோடா என் பேரக் குழந்தையை பாக்குற வரைக்குமாவது உயிரோட இருந்தா போதும்…” சலிப்போடு சொன்னாள் சிவகாமி.
“அப்படி சொல்லாதீங்க மாமி இந்த ஊரைவிட்டு போயிட்டா நீங்க பூரண குணமாயிடுவீங்க… “
நம்பிக்iகையை தூவிய மருமகளைபெருமையோடு பார்த்தாள் சிவகாமி.
*****
ஒரு பெரிய நரகத்தில் இருந்து சொர்க்கத்துக்கு இடப்பெயர்ச்சியான மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்தான்விமல்ராஜ்.
மேசையில் காப்பியை வைத்துவிட்டு பேசாமல் போன அட்சயாவின் முந்தானையைப் பிடித்து இழுத்தான்.
“அட்சயா… அம்மா எப்படியிருக்காங்க”
“படிப்படியா குணம் ஆயிட்டாங்க இப்ப தெளிவாயிருக்காங்க நல்லா சாப்புடுறாங்க எனக்கு கவலை எல்லாம் பாவங்க அந்த அப்பாவி சனங்க… “
எட்டிப்பார்த்த கண்ணீரை விரலால் தட்டிவிட்டாள் அட்சயா…
“அடி பைத்தியம் … மீண்டும் மீண்டும் ஏன் அந்த நரகத்தைப் பத்தி நினைக்குறே… மறுபடியும் என்னை அந்த ஊருக்கு டிரான்ஸ்பர் பண்ணினா வேலையே வேண்டாம்னு எழுதிக் கொடுத்திடுவேன்.”
அட்சயாவின் கன்னத்தை கிள்ளினான் விமல்ராஜ்
“ஆ…அம்மா…”இருகைகளாலும் பிடித்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்தாள் அட்சயா…”
“ஏய்… என்னாச்சு “
“வயிறு பயங்கரமா வலிக்குதுங்க… “
*****
கவலை படர்ந்த முகத்தோடு டாக்டர் பரசுராமன் இன்ஸ்பெக்டர் விமல்ராஜை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
“டாக்டர் பிரசவம் ஆச்சுங்களா அட்சயா எப்படி இருக்கா”
ஒரு தந்தைக்குரிய, கணவனுக்குரிய ஏக்கம் அவனிடமிருப்பதை கவனித்த டாக்டர் பரசுராமன் சில நிமிடங்கள் மௌனமாக இருந்துவிட்டு மெதுவாக சொன்னார்.
“சாரி இன்ஸ்பெக்டர் உங்க மனைவியை காப்பாத்த முடியல அந்த நச்சுக்காற்று உங்கமனைவியை வெகுவா பாதிச்சிருக்கு… குழந்தையை மட்டும் காப்பாத்திடோம்.. ஆனா.. “
“சொல்லுங்க டாக்டர்”
“குழந்தைக்கு பாக்குற சக்தியும் பேசுற சக்தியும் இல்ல. அந்த ஆலை இருக்கிற வரைக்கும்அங்க இருக்கிறவங்க ஆயுளுக்கு உத்தரவாதமே கிடையாது. எப்பவோ நடந்த ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு பாதிப்பும், போபால் விஷவாயு பாதிப்பும் இன்னும் பக்க விளைவுகளை ஏற்படுத்திகிட்டேதான் இருக்கு… அதப்போல அந்தப் பகுதிமக்களும் இதுமாதிரி துயரங்களை சந்திச்சிட்டேதான் இருக்கணும்…”
டாக்டர் பொறுமையா சொல்லிமுடித்ததும், விமல்ராஜ் சுவற்றில் தலையை முட்டிக்கொண்டு அழுதான்.
அவனைத் தடுத்து நிறுத்தினார் பரசுராமன்.
“இன்ஸ்பெக்டர் சார்… உங்களை எனக்கு நல்லாவேத்தெரியும். பேஸ்புக் மூலமாகவும், வாட்ஸ்அப் மூலமாகவும் உங்க முகம் எல்லார் மனசிலயும் பதிஞ்சி போயிருச்சி . ஆனா நீங்க இந்த அளவுக்கு அழுவுறதுதான் ஆச்சர்யாமா இருக்கு… உங்க கண்ணில கூட கண்ணீர் வருமா… இந்தக் கண்ணீர் அப்போ வந்திருக்குமா… உங்களுக்கும் சேர்த்து போராடின ஒரு நிறை மாத கர்ப்பிணியை குறிதவறாம சுட்டு கொன்னப்போ… உங்க கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீராவது வந்திருக்குமா? “
அந்த அப்பாவி மக்களின் ஒட்டு மொத்த உணர்வாய் பிரதிபலித்தது டாக்டரின் குரல். அவருக்கு பதில் சொல்ல முடியாமல் விமல்ராஜ் தொடர்ந்து அழுது கொண்டேயிருந்தான்.
*****
முகவரி
வீ. உதயக்குமாரன்,
வீரன்வயல் 614738,
ஜாம்புவானோடை அஞ்சல்,
திருவாரூர் மாவட்டம்.
கைப்பேசி 9842881670
மின் அஞ்சல் – udhayakumaran2015@gmail.com