மத்திய அரசு மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் பணி நியமனங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கான வாய்ப்புகளை உறுதி செய்திட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையங்களால் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளையும் தமிழில் நடத்த வேண்டும். ரயில்வே நிறுவனங்களில் பயிற்சி பெறுவோருக்கு 20% இடஒதுக்கீட்டின் கீழ் நேரடி நியமனங்களில், பிராந்திய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்திடும் வகையில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
தென் மண்டலத்தில் ரயில்வே பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அல்ல. வேலை தேடும் இளைஞர்கள் மத்தியில் இது பெரும் ஏமாற்றத்தையும், சமூக, அரசியல் வட்டாரத்தில் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது என கடிதத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.