நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆகஸ்ட் 4ம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1991-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு, தமிழ்நாடு நிர்வாக தீர்ப்பாய உத்தரவின் அடிப்படையில், மாற்றுப் பணி வழங்கப்பட்டது. இதன்படி வணிக வரித்துறையில் இளநிலை உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட சேக் அப்துல் காதர், எல்.அழகேசன், பி.சர்மிளா பேகம் உள்பட 16 பேரின் பணியை 2004 ம் ஆண்டு முதல் வரன்முறை செய்து, கடந்த 2010-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்காமல், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டதை எதிர்த்து, 16 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரர்களை 1996-ம் ஆண்டு முதல் பணி வரையறை செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தின் சேர்க்க வேண்டும் என்று கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை தமிழ்நாடு அரசு அமல்படுத்தவில்லை எனக் கூறி 16 பேரும் உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பட்டு தேவானந்த், தமிழ்நாடு அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் சி.சமயமூர்த்தி, நிதித்துறை செயலாளர் டி.உதயச்சந்திரன், வருவாய் நிர்வாகத்துறை முதன்மை ஆணையர் ராஜேஷ் லக்கானி, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன், வணிகவரித்துறை கமிஷனர் டி.ஜெகன்நாதன், கருவூலம் மற்றும் கணக்குத்துறை கமிஷனர் கிருஷ்ணன் உன்னி ஆகிய அதிகாரிகள் ஆகஸ்ட் 4ம் தேதி நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.




