முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஜூலை 21ம் தேதி திடீரென ராஜினாமா செய்தார். பின்னர் குடியரசு துணை தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு செப்டம்பர் 9ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதுவரை முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கு இருக்கிறார்? என்பது தெரியவில்லை. இதனிடைய எதிர்க்கட்சியை சார்ந்த சில மூத்த தலைவர்கள் தன்கர் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தனர். இந்நிலையில் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்துள்ள நேர்காணலில், ஜெகதீப் தன்கர் உடல் நல காரணங்களுக்காக மட்டுமே அவர் ராஜினாமா செய்தார் என்றும், அவருடைய ராஜினாமா கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளார் என விளக்கம் அளித்துள்ளார். மேலும் தங்கர் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார் எனக் கூறுவது எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரச்சாரம் என கூறியதோடு அத்தகைய குற்றச்சாட்டையும் நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் ஜெகதீப் தன்கர் அவருடைய பதவி காலத்தில் இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்டு அவருடைய பணியை திறம்பட செய்ததாகவும், இந்த விஷயத்தில் அதிகம் கற்பனை செய்து கொள்ளக் கூடாது எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.




