நேபாள பெருவெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு தாயகம் அழைத்து வரும் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக தமிழகத்தைச் சேர்ந்த நான்கு அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அ.ராஜ்மோகன், வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர்.வினோத் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.தென்னரசு ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் டெல்லி சென்றுள்ளனர்.
நேபாளத்தில் நடைபெற்று வரும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது, மீட்கப்படும் தமிழர்களை விரைவாக தாயகம் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது மற்றும் தேவையான உடனடி மருத்துவ உதவிகளை ஒருங்கிணைப்பது ஆகிய பணிகளை அமைச்சர்கள் மேற்கொள்ள உள்ளனர். இதற்கிடையே, நேபாளத்தில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை நேரடியாக ஒருங்கிணைக்க தமிழக அரசு அதிகாரிகள் குழுவும் காத்மாண்டுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்களை கண்டறியும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.






