4 நாள் பயணத்தில் உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் செல்கிறார்; வர்த்தகம் முதல் பாதுகாப்பு வரை முக்கிய பேச்சுவார்த்தை
பிரதமர் நரேந்திர மோடி நான்கு நாள் பயணமாக நாளை உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு புறப்படுகிறார்.
ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆகிய இரண்டு நாட்கள் உஸ்பெகிஸ்தானில் அரசு முறைப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இந்த சந்திப்பின்போது வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, டிஜிட்டல் இணைப்பு, எரிசக்தி, கல்வி மற்றும் இருநாட்டு மக்கள் தொடர்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியா–உஸ்பெகிஸ்தான் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகருக்குச் செல்கிறார். அங்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடைபெறும் 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.
மாநாட்டில் பாதுகாப்பு, இணைப்பு மற்றும் வாய்ப்புகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்தியாவின் முன்னுரிமைகளை பிரதமர் முன்வைக்க உள்ளார். SCO மாநாட்டுக்கு இடையே பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு சந்திப்புகளையும் நடத்த உள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும், மத்திய ஆசியாவின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் 6-வது உலக நாடோடி விளையாட்டுகளின் தொடக்க விழாவிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.






