“ஸ்டாலின் – திருமாவளவன் இடையே இருந்தது தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கைக் கூட்டணி” எனவும் பேச்சு
“என்னுடைய அரசியல் ஆசான் என்றால் அது தொல்.திருமாவளவன்தான்” என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் இன்று தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் சமூகநீதித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது அந்தத் துறையின் அமைச்சர் வன்னி அரசு பதிலளித்துப் பேசினார். தனது அரசியல் பயணம் மற்றும் தேர்தல் வெற்றி குறித்து பேசிய வன்னி அரசு, தனக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். அதேநேரத்தில் தங்களுக்கு இதுவரை யாரும் எங்கள் தலைவர் திருமாவளவனுக்கு நன்றி கூறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கும் இடையே இருந்த உறவு வெறும் தேர்தல் உடன்பாடோ, தேர்தல் கூட்டணியோ அல்ல என்று தெரிவித்தார். அது கொள்கையின் அடிப்படையில் அமைந்த கூட்டணி என்று குறிப்பிட்ட உதயநிதி, திருமாவளவனை தனது அரசியல் ஆசானாக பலமுறை குறிப்பிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், திருமாவளவனுக்கு தங்களது நன்றியை எப்போதும் தெரிவித்துக் கொள்வதாகவும் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் வன்னி அரசு, உதயநிதியின் கருத்தை வரவேற்று திருமாவளவனுக்கு தற்போது நன்றி கிடைத்திருப்பதாக குறிப்பிட்டார். திமுகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தற்போது வெவ்வேறு அரசியல் அணிகளில் உள்ள சூழலில், சட்டப்பேரவையில் திருமாவளவனை தனது “அரசியல் ஆசான்” என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டிருப்பது அரசியல் கவனத்தைப் பெற்றுள்ளது.






